மத்திய கிழக்கில் அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் படைகளுடன் கடந்த மூன்று வாரங்களாகக் கடும் போரில் ஈடுபட்டு வரும் ஈரான், தற்போது தனது நிலைப்பாட்டில் இருந்து பின்வாங்கியுள்ளது. “ஈரானுக்கு அணு ஆயுதங்களை உருவாக்கும் எண்ணம் இல்லை” என அந்நாட்டு அதிபர் மசூத் பெசெஷ்கியான் அறிவித்திருப்பது சர்வதேச அரசியலில் பெரும் திருப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.
அமெரிக்கா – இஸ்ரேல் கூட்டுப் படைகளுக்கும் ஈரானுக்கும் இடையேயான போர் தொடங்கி இன்றுடன் 21 நாட்கள் நிறைவடைகின்றன. இந்தப் போரின் போது ஹார்முஸ் ஜலசந்தியை மூடியது, வளைகுடா நாடுகளின் எண்ணெய் சுத்திகரிப்பு நிலையங்கள் மீது தாக்குதல் நடத்தியது என ஈரான் பல வியூகங்களை வகுத்தது. இருப்பினும், இஸ்ரேலின் தொடர் வான்வழித் தாக்குதலில் ஈரானின் ஏவுகணை உற்பத்தி ஆலைகள் மற்றும் அணுசக்தி ஆராய்ச்சி மையங்கள் கடுமையாகச் சேதமடைந்துள்ளன.
ஈரானியப் புத்தாண்டு தின பண்டிகையை முன்னிட்டு நாட்டு மக்களுக்கு உரையாற்றிய அதிபர் மசூத் பெசெஷ்கியான், அண்டை நாடுகளுடன் போரிடத் தங்களுக்கு விருப்பமில்லை என்பதைத் தெளிவுபடுத்தினார். அவர் கூறியதாவது:
“ஈரானுக்கு அணு ஆயுதங்களைப் பெற வேண்டும் என்ற விருப்பம் கிடையாது. தேசிய ஒருமைப்பாடு மற்றும் அண்டை நாடுகளுடன் வலுவான உறவைப் பேணுவதே எங்களது தற்போதைய இலக்கு. இந்தப் பிராந்தியத்தில் அமைதி நிலவ வேண்டும் என்பதே ஈரானின் விருப்பம் என்றார்.
ஈரான் அணு ஆயுதங்களைத் தயாரிக்க முயல்வதே இந்தப் போருக்கு முக்கியக் காரணமாக அமைந்தது. கடந்த ஜூன் மாதம் இஸ்ரேல் – ஈரான் இடையே 12 நாட்கள் நடந்த போரிலும், தற்போது கடந்த பிப்ரவரி 28-ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வரும் போரிலும் ஈரானின் முக்கிய அணுசக்தி விஞ்ஞானிகள் மற்றும் தளபதிகள் கொல்லப்பட்டுள்ளனர்.
தொடர் உயிரிழப்புகளாலும், பொருளாதாரச் சரிவினாலும் நிலைகுலைந்துள்ள ஈரான், தற்போது “அணு ஆயுதம் தேவையில்லை” எனக் கூறியிருப்பது, அமெரிக்கா மற்றும் இஸ்ரேலின் ராணுவ வலிமைக்கு முன்னால் ஈரான் அடிபணிந்துவிட்டதையே காட்டுவதாக அரசியல் நோக்கர்கள் கருதுகின்றனர்.
ஈரான் அதிபரின் இந்த அறிவிப்பு உலக நாடுகளிடையே நிம்மதியை ஏற்படுத்தியுள்ளது. போருக்கான அடிப்படைக் காரணமான ‘அணு ஆயுதக் கனவை’ ஈரான் கைவிடுவதாக அறிவித்துள்ளதால், விரைவில் போர் நிறுத்தம் ஏற்பட வாய்ப்புள்ளதாகத் தெரிகிறது. எனினும், இதனை அமெரிக்காவும் இஸ்ரேலும் எந்தளவுக்கு நம்பும் என்பதைப் பொறுத்தே அடுத்தகட்ட நகர்வுகள்அமையும் என்பது குறிப்பிடத்தக்கது.
