2026 பிப்ரவரி 1 இன்று முதல் அமலுக்கு வரும் மாற்றங்களில் வாகன ஓட்டிகளுக்கு முக்கிய நிவாரணம் கிடைத்துள்ளது. இனி கார்களுக்கான பாஸ்டாக்  கணக்கைச் செயல்படுத்த ‘KYV’ எனப்படும் வாகன விவரங்களைச் சமர்ப்பிக்கும் நடைமுறை கட்டாயமில்லை என தேசிய நெடுஞ்சாலை ஆணையம் அறிவித்துள்ளது.

பாஸ்டாக் தவறாகப் பயன்படுத்தப்பட்டால் மட்டுமே இந்த விவரங்கள் கேட்கப்படும். இதனால் சுங்கச்சாவடிகளில் தேவையற்ற தாமதங்கள் குறைவதோடு, புதிய பாஸ்டாக் பெறுவதும் எளிதாகும்.

மறுபுறம், நிதிநிலை மாற்றங்கள் உங்கள் பாக்கெட்டைப் பாதிக்க வாய்ப்புள்ளது. அரசு அறிவித்துள்ள புதிய வரி விகிதங்களால் சிகரெட் மற்றும் புகையிலை பொருட்களின் விலை உயர்கிறது.

அதேபோல், சர்வதேச சந்தை நிலவரத்திற்கு ஏற்ப எல்பிஜி சிலிண்டர், சிஎன்ஜி, பிஎன்ஜி மற்றும் விமான எரிபொருளின் விலைகளும் இன்று மாற்றியமைக்கப்பட உள்ளன. இது உங்கள் பயணச் செலவு மற்றும் சமையல் எரிவாயு விலையில் மாற்றத்தை ஏற்படுத்தக்கூடும்.

நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று தனது 9-வது பட்ஜெட்டைத் தாக்கல் செய்ய உள்ளதால், பொதுவாக விடுமுறை நாளாக இருந்தாலும் பிப்ரவரி 1-ம் தேதி பங்குச் சந்தைகள் (NSE & BSE) வழக்கம் போலச் செயல்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

பட்ஜெட் அறிவிப்புகளால் சந்தையில் ஏற்படும் மாற்றங்களை முதலீட்டாளர்கள் உடனுக்குடன் கவனிக்கும் வகையில் இந்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.