பாத்த்ரூம் கண்ணாடியில் தண்ணீர் தெறிப்பதால் வெள்ளை நிறக் கறைகள் மற்றும் சுண்ணாம்பு போன்ற படலம் உருவாவது பல வீடுகளில் இருக்கும் பிரச்னை. குறிப்பாக கடின நீர் பயன்படுத்தப்படும் இடங்களில், அதில் உள்ள கனிமங்கள் கண்ணாடியின் மேற்பரப்பில் படிந்து நாளடைவில் பிடிவாதமான கறைகளாக மாறலாம். சாதாரண தண்ணீரால் துடைத்தாலும் அவை எளிதில் நீங்காது.

இத்தகைய கறைகளை அகற்ற ஸ்க்ரப்பர் அல்லது கம்பி போன்றவற்றைப் பயன்படுத்தி கடுமையாக தேய்ப்பதை தவிர்ப்பது நல்லது. கண்ணாடியை அதிகமாக உரசினால் அதன் மேற்பரப்பில் கீறல்கள் ஏற்பட வாய்ப்புள்ளது. அதற்கு பதிலாக வீட்டிலேயே கிடைக்கும் வெள்ளை வினிகர் மற்றும் தண்ணீர் பயன்படுத்தி ஒரு எளிய கலவையை தயாரிக்கலாம்.

இதற்காக அரை கப் வெள்ளை வினிகருடன் அரை கப் தண்ணீரை கலந்து தெளிக்கும் பாட்டிலில் ஊற்ற வேண்டும். கறைகள் மிகவும் பிடிவாதமாக இருந்தால், சிறிதளவு பேக்கிங் சோடாவையும் சேர்க்கலாம். இந்தக் கலவையை கண்ணாடியில் உள்ள வெள்ளைக் கறைகள் மீது தெளித்து சுமார் 5 முதல் 7 நிமிடங்கள் அப்படியே விட வேண்டும். வினிகரில் உள்ள அமிலத்தன்மை நீரில் உள்ள கனிமப் படிவங்களை தளர்த்த உதவும் எனக் கூறப்படுகிறது.

பின்னர் மென்மையான துணி அல்லது மைக்ரோஃபைபர் துணியால் கண்ணாடியை மெதுவாகத் துடைத்து, இறுதியில் உலர்ந்த துணியால் மீண்டும் துடைக்கலாம். இதனால் கண்ணாடியில் இருந்த வெள்ளைப் படலம் குறைந்து, அது தெளிவாகத் தோன்றும். இருப்பினும், வினிகர் மற்றும் பேக்கிங் சோடாவை கலந்து பயன்படுத்துவது குறித்து கூடுதல் கவனம் தேவை; கண்ணாடியின் விளிம்புகள், பூச்சு அல்லது உலோகப் பகுதிகளில் நீண்ட நேரம் படாமல் பார்த்துக்கொள்வது நல்லது.