சமையலறையில் வைத்திருந்த வெங்காயத்தில் சில நாட்களுக்குப் பிறகு வேர் அல்லது பச்சை முளைகள் வருவது வழக்கம். இதைப் பார்த்ததும் பலரும் அந்த வெங்காயத்தை பயன்படுத்த முடியாது என்று நினைத்து குப்பையில் போட்டு விடுகின்றனர். ஆனால், முழுமையாக அழுகாத முளைத்த வெங்காயத்தை வைத்து வீட்டிலேயே புதிய வெங்காயச் செடியை வளர்க்க முடியும். அதற்குப் பெரிய தோட்டமோ, அதிக செலவோ தேவையில்லை.
இதற்கு முதலில் வேர் நன்றாக இருக்கும், முழுமையாக அழுகாத முளைத்த வெங்காயத்தைத் தேர்வு செய்ய வேண்டும். அடிப்பகுதியில் தண்ணீர் வெளியேறுவதற்கான துளைகள் உள்ள சிறிய குடுவையை எடுத்துக்கொள்ளலாம். அதில் இலகுவாகவும் பொலபொலப்பாகவும் இருக்கும் மண்ணை நிரப்பி, வெங்காயத்தின் வேர் பகுதி மண்ணுக்குள் செல்லும் வகையில் நட வேண்டும். வெங்காயத்தின் மேல் பகுதி முழுவதும் மண்ணுக்குள் புதைக்காமல் இருப்பது முக்கியம்.
நட்ட பிறகு தினமும் அதிகமாக தண்ணீர் ஊற்ற வேண்டியதில்லை. மண்ணின் மேற்பகுதி காய்ந்த பிறகு சிறிதளவு தண்ணீர் ஊற்றினால் போதும். பொதுவாக வாரத்திற்கு 2 முதல் 3 முறை லேசாக தண்ணீர் ஊற்றலாம். குடுவையில் தண்ணீர் தேங்கினால் வெங்காயம் அழுகும் வாய்ப்பு இருப்பதால், வடிகால் வசதி இருப்பதை உறுதி செய்ய வேண்டும். செடிக்கு தினமும் போதுமான சூரிய ஒளியும் கிடைக்க வேண்டும்.
சரியான பராமரிப்பு கிடைத்தால் பச்சை இலைகள் வளரத் தொடங்கும். அந்த இலைகளை தேவையான அளவு வெட்டி சமையல், சாலட் போன்றவற்றில் பயன்படுத்தலாம். மேலும், சுமார் 2 முதல் 3 மாதங்களில் வெங்காயம் அறுவடைக்கு தயாராகலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. பால்கனி, மாடி அல்லது ஜன்னல் அருகில் சிறிய இடம் இருந்தால்கூட இந்த முறையை முயற்சி செய்யலாம்.
