இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் கிரிக்கெட் தொடரை ஏற்கனவே முழுமையாக இழந்துவிட்ட பாக்கிஸ்தான் அணி, தற்போது தொடரின் இறுதிப் போட்டிக்குத் தயாராகி வரும் வேளையில், பயிற்சியின்போது கால்பந்து விளையாடிய வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி பெரும் விவாதத்தையும் கேலிகளையும் சந்தித்து வருகிறது.
தொடர்ச்சியான மோசமான தோல்விகளால் ஏற்கனவே நெருக்கடியில் இருக்கும் பாக்கிஸ்தான் வீரர்கள், மிக முக்கியமான கட்டத்தில் கிரிக்கெட்டை விட்டுவிட்டு கால்பந்து பயிற்சி மேற்கொள்வது ஏன் என்று ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.
இங்கிலாந்துக்கு எதிரான மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதல் இரண்டு போட்டிகளிலுமே பாக்கிஸ்தான் அணி படுதோல்வி அடைந்துள்ளது. முதல் போட்டியில் இன்னிங்ஸ் மற்றும் 103 ரன்கள் வித்தியாசத்திலும், லார்ட்ஸில் நடைபெற்ற இரண்டாவது போட்டியில் 194 ரன்கள் வித்தியாசத்திலும் வீழ்ந்து தொடரை இழந்துள்ளது.
Pakistan are preparing to win the FIFA World Cup with their cricket team 🤣🔥
And, they’ll say: “Why couldn’t we win?” 😁 pic.twitter.com/OUnZkx44zh
— Mukku (@Cric_Mukku) September 4, 2026
பொதுவாக கிரிக்கெட் அணிகள் உடற்தகுதி மற்றும் ஒருங்கிணைப்புக்காக கால்பந்து பயிற்சிகளை மேற்கொள்வது வழக்கம் தான். ஆனால், டெஸ்ட் போட்டிகளில் படுதோல்வி அடைந்துள்ள இந்தச் சூழலில், இந்த வீடியோ வெளியானது நெட்டிசன்களுக்கு மிகச் சரியான இரையாகிவிட்டது.
களத்தில் மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தியது மட்டுமின்றி, பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தில் கடந்த சில நாட்களாகக் கடுமையான குழப்பங்களும் அரங்கேறியுள்ளன. இறுதிப் போட்டிக்கு முன்னதாக, அணியிலிருந்து 7 வீரர்கள் அதிரடியாகச் சொந்த ஊருக்குத் திருப்பி அனுப்பப்பட்டுள்ளனர். அதுமட்டுமின்றி, தலைமைப் பயிற்சியாளர் சர்பராஸ் அகமது நீக்கப்பட்டு, அவருக்குப் பதிலாக மைக் ஹெசன் புதிய பயிற்சியாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.
இத்தகைய தொடர் குழப்பங்களுக்கு நடுவில் பாக்கிஸ்தான் வீரர்கள் கால்பந்து விளையாடும் காட்சிகள் இணையத்தில் வைரலாகி, கிரிக்கெட் வட்டாரத்தில் மேலும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
