ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் புகழ்பெற்ற கேப்டனும், பஞ்சாப் கிங்ஸ் அணியின் தற்போதைய பயிற்சியாளருமான ரிக்கி பாண்டிங், சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலுக்கு ஒரு விசித்திரமான ஆலோசனையை வழங்கியுள்ளார். டி20 கிரிக்கெட்டை ‘கிரிக்கெட்’ என்று அழைக்கக் கூடாது என்றும், அதை வெறுமனே ‘டி20’ என்று மட்டுமே அழைக்க வேண்டும் என்றும் அவர் கூறியுள்ளார்.

கடந்த சில ஆண்டுகளாக அமெரிக்கா போன்ற நாடுகளில் டி20 வடிவம் மூலம் கிரிக்கெட் பிரபலமடைந்து வருகிறது. 2024 உலகக் கோப்பையை வெற்றிகரமாக நடத்திய அமெரிக்க அணி, பாகிஸ்தானை வீழ்த்தி அடுத்த சுற்றுக்கு முன்னேறி அசத்தியது. மேலும், அங்கு மேஜர் லீக் கிரிக்கெட் தொடரும் நடைபெற்று வருகிறது.

இருப்பினும், அமெரிக்காவில் கிரிக்கெட் என்றாலே அது சலிப்பூட்டும் ஐந்து நாள் ஆட்டம் என்ற தவறான எண்ணமே பெரும்பாலோரிடம் உள்ளது என்று பாண்டிங் சுட்டிக்காட்டுகிறார். இதனால் ‘கிரிக்கெட்’ என்ற பெயர் அங்கு விளையாட்டின் வளர்ச்சிக்குத் தடையாக இருப்பதாக அவர் கருதுகிறார்.

பாண்டிங் கூறுகையில், “நான் அமெரிக்காவில் விளையாட்டை விளம்பரப்படுத்தினால் அதை ‘கிரிக்கெட்’ என்று கூற மாட்டேன், ‘டி20’ என்று மட்டுமே கூறுவேன். பேஸ்பால் விளையாட்டில் ஒரு ஹோம் ரன் அடிப்பதே அரிது, ஆனால் டி20 ஆட்டத்தில் 15 சிக்ஸர்கள் வரை அடிக்கலாம் என்று அமெரிக்க குழந்தைகளுக்குப் புரிய வைப்பேன்” எனக் கூறியுள்ளார்.

அமெரிக்க சந்தையைக் கைப்பற்ற ஐசிசி தீவிரமாக முயன்று வரும் நிலையில், 2028 லாஸ் ஏஞ்சல்ஸ் ஒலிம்பிக்கிலும் டி20 கிரிக்கெட் சேர்க்கப்பட்டுள்ளது. இந்தச் சூழலில், அமெரிக்காவில் விளையாட்டை மேலும் பிரபலப்படுத்த பாண்டிங் கூறியுள்ள இந்த வேடிக்கையான யோசனை ரசிகர்களிடையே பெரும் கவனத்தைப் பெற்றுள்ளது.