சென்னையில் இன்று (செப்டம்பர் 6) தொடங்கிய துலீப் கோப்பை இறுதிப் போட்டியில், தெற்கு மண்டலம் மற்றும் கிழக்கு மண்டல அணிகள் பலப்பரீட்சை நடத்தி வருகின்றன. இந்தத் தொடக்க நாளின் ஆட்டத்தை விட, களத்தில் தெற்கு மண்டல கேப்டன் திலக் வர்மாவுக்கும், கிழக்கு மண்டலத்தின் வைபவ்  சூர்யவன்ஷிக்கும் இடையே நடந்த குறும்பான சண்டையும் கலகலப்பான உரையாடலும்தான் தற்போது இணையத்தில் பேசுபொருளாக மாறியுள்ளது.

கிழக்கு மண்டலத்தின் முதல் இன்னிங்ஸின் போது ஆட்டம் விறுவிறுப்பாகச் சென்றுகொண்டிருந்தது. அப்போது, அணியின் துணைக்கேப்டனாகப் பொறுப்பு வகிக்கும் வெறும் 15 வயதுடைய இளம் வீரர்சூர்யவன்ஷி, இந்திய அணியின் முன்னணி வேகப்பந்து வீச்சாளர் முகமது சிராஜின் பந்துவீச்சை எதிர்கொண்டு பவுண்டரிகளும் ஒரு சிக்சருமாக விளாசித் தள்ளினார். அவரது இந்த அதிரடியான ஆட்டத்தால் கலக்கமடைந்த தெற்கு மண்டல கேப்டன் திலக் வர்மா, உடனடியாக சுழற்பந்து வீச்சைத் தாக்கிட களமிறக்கினார்.

 

இதையடுத்து, ஃபீல்டை மாற்றியமைத்து மனரீதியான அழுத்தத்தை உருவாக்கத் திலக் வர்மா முயன்றார். அப்போது ஸ்டம்ப் மைக்கில் தெளிவாகப் பதிவான குரலில், “என்னங்க இது துணைக்கேப்டன்..?”  என்று திலக் வர்மா விளையாட்டுத் தனமாகக் கிண்டலடித்தார். இந்தச் சின்னக் கிண்டல் வார்த்தையைக் கேட்டு இரு வீரர்களும் புன்னகை சிந்தினர்; போட்டியின் தீவிரத்திற்கு நடுவே இந்த இலகுவான தருணம் மைதானத்தில் சிரிப்பலையை ஏற்படுத்தியது.

ஆனால், இந்தத் தோழமையான கேலிக்குப் பின்னால் ஒரு மைண்ட் கேம் மறைந்திருந்தது. திலக் வர்மாவின் இந்தச் சீண்டலுக்குப் பிறகு, சூர்யவன்ஷியின் கவனத்தில் தொய்வு ஏற்பட்டது போலத் தோன்றியது. மிகச் சிறப்பாக ஆடி வந்த அவர், அரைசதத்தை நெருங்கும் தருவாயில் (44 ரன்கள், 37 பந்துகள்) சம வத்ஸலா மிலிந்த் பந்துவீச்சில் தனது விக்கெட்டைப் பரிதாபமாகப் பறிகொடுத்தார். ஆரம்பத்தில் இருந்த அதிரடி வேகத்தை அவர் தக்கவைக்கத் தவறியது கிழக்கு மண்டலத்திற்குப் பெரிய பின்னடைவாக அமைந்தது.

இந்த ஆண்டுக்கான துலீப் கோப்பை இறுதிப் போட்டி, இந்திய கிரிக்கெட்டின் எதிர்காலத் தூண்களாகக் கருதப்படும் இளம் வீரர்களின் மோதலாக உருவெடுத்துள்ளது.  திறமையான பேட்ஸ்மேன் திலக் வர்மா தெற்கு மண்டலத்தை வழிநடத்த, மறுபுறம் இஷான் கிஷன் தலைமையிலான கிழக்கு மண்டல அணியில் 15 வயது  சூர்யவன்ஷி துணைக்கேப்டனாகப் பொறுப்பு வகித்து வருவது குறிப்பிடத்தக்கது.