ஜம்மு காஷ்மீர் மாநிலத்தைச் சேர்ந்த 55 வயது பெண்மணி உல்பாத் பானோ. இவர் கடந்த 30 ஆண்டுகளாக தபால்காரராகப் பணியாற்றி வருகிறார். கடும் பனிப்பொழிவு, மலைப்பாதைகள் என எத்தகைய கடினமான சூழலிலும், தினமும் சுமார் 25 கடிதங்களைச் சுமந்து கொண்டு பல கிலோமீட்டர் தூரம் நடந்தே சென்று உரியவர்களிடம் சேர்க்கிறார். இவரிடம் மிதிவண்டியோ அல்லது வாகன வசதியோ இல்லை.

ஒரு கையில் குடையும் மறு கையில் தபால் கட்டுகளுமாகச் செல்லும் இவர், அந்தப் பகுதியின் முதல் பெண் தபால்காரர் என்ற பெருமைக்குரியவர். ஆண்கள் அதிகம் உள்ள இத்துறையில் சமமான உழைப்பை வழங்கினாலும், இவருக்கு மாதச் சம்பளமாக 22 ஆயிரம் ரூபாய் மட்டுமே கிடைக்கிறது.

இன்னும் ஐந்து ஆண்டுகளில் ஓய்வு பெற உள்ள நிலையிலும், மக்கள் தங்கள் உறவினர்களிடமிருந்து வரும் கடிதங்களைப் பார்த்து மகிழ்வதைக் கண்டு தானும் மகிழ்ச்சி அடைவதாக உல்பாத் கூறுகிறார். இந்த வேலையை ஒரு சேவையாகக் கருதிச் செய்து வரும் இவருக்குப் பலரும் தங்களது பாராட்டுக்களைத் தெரிவித்து வருகின்றனர்.