சென்னை கொடுங்கையூரில் தெருநாய் கடித்ததில் வாலிபர் ஒருவர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கொடுங்கையூர் என்.எஸ்.கே சாலையைச் சேர்ந்த அருள் (25) என்ற இளைஞரை கடந்த 5-ஆம் தேதி அவ்வழியாகச் சென்ற தெருநாய் ஒன்று கடித்தது. இதனைத் தொடர்ந்து தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், திடீரென அவரது உடல்நிலை மோசமடைந்தது.

உடனடியாக மேல் சிகிச்சைக்காக ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே அவர் பரிதாபமாக உயிரிழந்தார். தமிழகத்தில் 2025-ஆம் ஆண்டில் மட்டும் இதுவரை சுமார் 5.25 லட்சம் பேர் நாய்க்கடியால் பாதிக்கப்பட்டுள்ளதும், அதில் சுமார் 30 பேர் உயிரிழந்துள்ளதும் குறிப்பிடத்தக்கது. இச்சம்பவம் தெருநாய்களின் பெருக்கத்தை கட்டுப்படுத்தவும், பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்யவும் மாநகராட்சி தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கையை வலுப்படுத்தியுள்ளது.

இதனிடையே, செல்லப்பிராணிகள் வளர்ப்போர் உரிமம் பெறுவதற்கான காலக்கெடு நேற்றுடன் (டிச. 19) நிறைவடைந்த நிலையில், சென்னையில் ஆபத்தான பிட்புல் மற்றும் ராட்வீலர் இன நாய்களைப் புதிதாக வாங்கி வளர்க்க இன்று (டிச. 20) முதல் அதிரடி தடை விதிக்கப்பட்டுள்ளது. சென்னை மாநகராட்சி மாமன்றக் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தின்படி, தடையை மீறி இந்த வகை நாய்களை வளர்த்தால் ரூ. 1 லட்சம் அபராதம் விதிக்கப்படும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.

ஏற்கனவே இந்த நாய்களை வளர்ப்பவர்கள் முறையாக உரிமம் பெற்று, வெளியில் அழைத்துச் செல்லும்போது முகக்கவசம் (Muzzle) மற்றும் சங்கிலி அணிவிப்பதை உறுதி செய்ய வேண்டும்; தவறினால் ரூ. 5,000 அபராதம் வசூலிக்கப்படும்.

மாநகராட்சியில் இதுவரை 98,523 செல்லப்பிராணிகள் பதிவு செய்யப்பட்டிருந்தாலும், 56,378 பிராணிகளுக்கு மட்டுமே உரிமம் பெறப்பட்டுள்ளதால், இன்று முதல் வீடு வீடாகச் சென்று ஆய்வு நடத்தவும் அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனர்.