நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத்தொடர் நடைபெற்று வரும் நிலையில், மக்களவையில் எவ்வித விரிவான விவாதங்களும் இன்றி மிகக் குறுகிய காலத்தில் முக்கிய மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டது தேசிய அளவில் பெரும் விவாதத்தைக் கிளப்பியுள்ளது. இந்தக் கூட்டத்தொடரில் மொத்தம் 9 முக்கிய மசோதாக்களை நிறைவேற்ற வெறும் 52 நிமிடங்கள் மட்டுமே எடுத்துக்கொள்ளப்பட்டுள்ளன.

​மக்களவையில் எதிர்க்கட்சிகளின் தொடர் அமளி மற்றும் கூச்சல் குழப்பங்களுக்கு இடையே, இந்த 9 மசோதாக்களும் குரல் வாக்கெடுப்பு (Voice Vote) மூலம் அவசர அவசரமாக நிறைவேற்றப்பட்டுள்ளன. இதில் வந்தே மாதரத்திற்குச் சட்டப் பாதுகாப்பு அளிக்கும் மசோதா, பிறப்பு & இறப்பு விவரப்பதிவு திருத்த மசோதா மற்றும் ‘கேரளா’ மாநிலத்தின் பெயரை ‘கேரளம்’ என அதிகாரப்பூர்வமாக மாற்றுவது உள்ளிட்ட பல முக்கிய மசோதாக்கள் அடங்கும்.

​குறிப்பாக, நாட்டின் அனைத்துக் குடிமக்களையும் பாதிக்கக்கூடிய ‘பிறப்பு & இறப்பு விவரப்பதிவு திருத்த மசோதா’ எவ்வித ஆழமான விவாதமும் இன்றி, வெறும் ஒரே நிமிடத்திற்குள் குரல் வாக்கெடுப்பு மூலம் நிறைவேற்றப்பட்டது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பிற முக்கிய மசோதாக்களுக்கும் சில நிமிடங்களே ஒதுக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.

​முக்கியச் சட்ட திருத்தங்கள் மற்றும் மசோதாக்கள் குறித்து நாடாளுமன்ற உறுப்பினர்கள் விவாதிக்கப் போதிய நேரம் ஒதுக்கப்படாமல், மின்னல் வேகத்தில் குரல் வாக்கெடுப்பு மூலம் நிறைவேற்றப்பட்டதற்கு எதிர்க்கட்சிகள் கடுமையான கண்டனங்களைப் பதிவு செய்து வருகின்றன. அதேவேளையில், அவையின் நேரத்தை வீணடிக்காமல் மக்கள் நலன் சார்ந்த மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டுள்ளதாக ஆளுங்கட்சி தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.