ஏழை மற்றும் பழங்குடியினக் குழந்தைகளின் கல்விக்காகவும் பாதுகாப்பிற்காகவும் அரசு மற்றும் தொண்டு நிறுவனங்களால் நடத்தப்படும் ஆசிரமப் பள்ளிகள், சில சமயங்களில் அங்குள்ள அதிகாரிகளின் அலட்சியத்தால் பிஞ்சுக் குழந்தைகளின் சுடுகாடாக மாறும் அவலம் தொடர்கதையாகி வருகிறது.
அந்த வகையில், மகாராஷ்டிர மாநிலம் கட்சிரோலி பகுதியில் செயல்பட்டு வரும் ஆசிரமப் பள்ளி ஒன்றில் தங்கிப் படித்து வந்த மாணவிகள் சிலர் அடுத்தடுத்து சந்தேகத்திற்கு இடமான முறையில் உயிரிழந்த சம்பவம் ஒட்டுமொத்த மாநிலத்தையும் உலுக்கியுள்ளது.
இந்தத் துயரச் சம்பவத்தில் பள்ளி நிர்வாகத்தின் கடுமையான அலட்சியம் அம்பலமானதை அடுத்து, அப்பள்ளியின் தலைமை ஆசிரியர் மற்றும் விடுதிப் பொறுப்பாளர் இருவரையும் காவல் துறையினர் அதிரடியாகக் கைது செய்துள்ளனர்.
பள்ளி விடுதியில் தங்கியிருந்த மாணவிகளுக்குத் திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டபோது, அவர்களுக்கு உரிய நேரத்தில் மருத்துவச் சிகிச்சை அளிக்காமல் விடுதி நிர்வாகம் அலட்சியமாக இருந்ததே இந்த மரணங்களுக்கு முக்கியக் காரணம் என்று கூறப்படுகிறது.
குழந்தைகளின் உடல்நிலை மோசமடைந்த நிலையிலும், பெற்றோருக்குச் சரியான தகவல்களைத் தெரிவிக்காமலும், முறையான மருத்துவ உதவிகளை வழங்காமலும் காலந்தாழ்த்தியதால் பிஞ்சு உயிர்கள் பரிதாபமாகப் பறிபோயின. தங்கள் பிள்ளைகளை நம்பிப் பள்ளியில் ஒப்படைத்த பெற்றோர்கள், குழந்தைகள் சடலமாக மீட்கப்பட்டதைக் கண்டு கதறித் துடித்த காட்சிகள் காண்போரின் நெஞ்சைப் பிழியும் வகையில் இருந்தன.
இச்சம்பவம் குறித்துத் தகவலறிந்த போலிஸாரும் கல்வித் துறை அதிகாரிகளகளும் உடனடியாகச் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று தீவிர விசாரணை மேற்கொண்டனர். முதற்கட்ட விசாரணையில் விடுதிப் பராமரிப்பிலும், மாணவிகளின் பாதுகாப்பிலும், மருத்துவச் சிகிச்சை அளிப்பதிலும் கடுமையான விதிமீறல்களும் அலட்சியமும் இருந்தது உறுதி செய்யப்பட்டது.
இதனைத் தொடர்ந்து, மாணவிகளின் மரணத்திற்குக் காரணமான தலைமை ஆசிரியர் மற்றும் விடுதி காப்பாளர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டு அவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். ஆசிரமப் பள்ளிகளில் குழந்தைகள் பாதுகாப்பை உறுதி செய்ய அரசு கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் எனப் பொதுமக்களும் சமூக ஆர்வலர்களும் தீவிரமாகக் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
