உத்தரபிரதேசத்தில் தெருநாய் கடித்த சில மணி நேரங்களிலேயே இளைஞர் ஒருவர் வினோதமான முறையில் நடந்து கொள்ளும் அதிர்ச்சியூட்டும் சம்பவம் நிகழ்ந்துள்ளது. நாய் கடித்த 18 மணி நேரத்திற்குள்ளாகவே, அந்த இளைஞர் மற்றவர்களை கடிக்க ஓடுவதும், விசித்திரமான குரலில் சத்தம் எழுப்புவதும் அந்தப் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில் பொதுவாக ரேபிஸ் நோயின் அறிகுறிகள் தென்பட சில நாட்கள் அல்லது வாரங்கள் ஆகும் நிலையில், இவ்வளவு குறுகிய காலத்தில் இத்தகைய மாற்றங்கள் ஏற்பட்டது மருத்துவர்களிடையே வியப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவத்தின் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் நிலையில், பாதிக்கப்பட்ட இளைஞர் உடனடியாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
மேலும் நாய் கடித்தவுடன் முறையான தடுப்பூசி போடாததே இதற்கு முக்கிய காரணமாகக் கூறப்படுகிறது. தெருநாய்கள் கடித்தால் அலட்சியமாக இருக்காமல், உடனடியாக அரசு மருத்துவமனையை அணுகி தகுந்த சிகிச்சை பெற வேண்டும் என்று சுகாதாரத் துறை அதிகாரிகள் பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
