இன்ஸ்டாகிராமில் வெளியான ஒரு உருக்கமான வீடியோ, பார்வையாளர்களை மிகுந்த மன உளைச்சலுக்கு உள்ளாக்கியுள்ளது. இந்த வீடியோவில், 14 வயது சிறுவன் ஷாவெஸ் என்ற பெயருள்ள சிறுவன், தனது பக்கத்துக்கு வீட்டு நாயால் கடிபட்ட சம்பவத்தை பயத்தால் குடும்பத்தினரிடம் சொல்லாமல் மறைத்துவிட்டான். கடிபட்டு ஒரு மாதத்திற்கும் மேல் கடந்து விட்டதால், சரியான நேரத்தில் சிகிச்சை பெறாமல், அவனுக்கு ரேபீஸ் நோய் பரவியது. நோயின் அறிகுறிகள் தோன்றியபோது, அவன் தண்ணீரை பார்த்து பயந்து, உணவு கூட உண்ணாமல் போனான். இறுதியாக, அம்புலன்ஸில் தந்தையின் மடியில் அவன் உயிரிழந்தான். இந்த வீடியோவில் சிறுவன் வலியால் கதறுவதும், தந்தை அழுவதும் பார்க்கும்போது இதயம் உடைந்து போகிறது.

இந்த சம்பவம் உத்தரப் பிரதேசத்தின் காசியாபாத் மாவட்டத்தில் 2023-ல் நடந்தது. சிறுவனுக்கு நோய் அறிகுறிகள் தெரிந்த பிறகு, பல மருத்துவமனைகளுக்கு அழைத்துச் சென்றனர், ஆனால் ரேபீஸ் பரவியதால் சிகிச்சை சாத்தியமில்லை என மருத்துவர்கள் தெரிவித்தனர். இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி, பார்வையாளர்களை கலங்கச் செய்துள்ளது. இது, நாய் கடித்தால் உடனடியாக சிகிச்சை பெற வேண்டும், தடுப்பூசி அவசியம் என்பதை எச்சரிக்கையாக நினைவூட்டுகிறது. இந்தியாவில் ஆண்டுதோறும் 18,000-20,000 பேர் ரேபீஸ் நோயால் இறக்கின்றனர், குறிப்பாக குழந்தைகளுக்கு இது பெரும் ஆபத்து.