திமுக ஆட்சிக் காலத்தில் பல்வேறு சிறப்பான மக்கள் நலத் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டதாகக் கூறி, திமுகவின் பிரபல பேச்சாளர் சிவாஜி கிருஷ்ணமூர்த்தி பேசிய மேடைப் பேச்சு ஒன்று தற்போது சமூக வலைதளங்களில் வெளியாகி மிகப்பெரிய விவாதத்தையும் சர்ச்சையையும் கிளப்பியுள்ளது.

​நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டு காரசாரமாகப் பேசிய சிவாஜி கிருஷ்ணமூர்த்தி, முந்தைய திமுக ஆட்சியின் திட்டங்களைப் பட்டியலிட்டுப் பேசினார். அப்போது, “இந்நேரம் மு.க.ஸ்டாலின் அவர்கள் வெற்றி பெற்று மீண்டும் திமுக ஆட்சிக்கு வந்திருந்தால், பொதுமக்கள் அனைவருக்கும் தலா ரூ.8,000 மதிப்பிலான கூப்பன்கள் கொடுக்கப்பட்டிருக்கும். அந்த கூப்பனைக் கொண்டு உங்களுக்குப் பிடித்தமான அனைத்துப் பொருட்களையும் நீங்களே கடைகளில் சென்று வாங்கியிருக்கலாம்” என்று தெரிவித்தார்.

​தொடர்ந்து மக்கள் அளித்த தீர்ப்பு குறித்துக் காட்டமாகப் பேசிய அவர், “சில பேருக்கு விஷயத்தைச் சொன்னால் புரியும், ஆனால் சில பேருக்கு அதை நேரில் அனுபவித்துப் பார்த்தால்தான் புரியும். அந்த வகையில் தமிழ்நாடு மக்களுக்குப் பட்டால்தான் புத்தி வரும் என்பதற்கு மிகச் சிறந்த உதாரணம் இந்த 2026 தேர்தல் முடிவுகள்தான்!” என்று வாக்களித்த தமிழ்நாட்டு மக்களை நேரடியாகவே சாடும் வகையில் பேசினார்.

​”ஆட்சி மாறிய பிறகுதான் முந்தைய ஆட்சியின் அருமையும், கிடைக்காமல் போன சலுகைகளும் மக்களுக்குப் புரியவரும்” என்ற தொனியில் திமுக பேச்சாளர் சிவாஜி கிருஷ்ணமூர்த்தி பேசிய இந்த காணொளி, தற்போது எக்ஸ் (X) உள்ளிட்ட சோசியல் மீடியா தளங்களில் வைரலாகி வருகிறது.

​”தேர்தலில் வாக்களித்த தமிழ்நாட்டு மக்களைப் பார்த்து ‘பட்டால்தான் புத்தி வரும்’ எனப் பேசுவது பொதுமக்களை இழிவுபடுத்தும் செயல்” என்று கூறி, நெட்டிசன்களும் எதிர்க்கட்சியினரும் சிவாஜி கிருஷ்ணமூர்த்தியின் இந்தச் சர்ச்சைப் பேச்சுக்குக் கடுமையான கண்டனங்களைப் பதிவு செய்து வச்சு செய்து வருகின்றனர்.