தமிழ்நாட்டின் மிக நீளமான கோவை ஜிடி நாயுடு பாலத்தை சமீபத்தில் முதல்வர் ஸ்டாலின் திறந்து வைத்தார். இந்த பாலத்திற்கு ஜிடி நாயுடு என பெயரிடப்பட்டுள்ளதால் ஜாதி பெயரை வைத்துள்ளதாக எதிர்கட்சிகள் குற்றம் சாட்டி வருகிறது. இதற்கு தற்போது விருதுநகரில் செய்தியாளர்களை சந்தித்து அமைச்சர் தங்கம் தென்னரசு விளக்கம் கொடுத்துள்ளார்.
இது பற்றி அவர் பேட்டியில் கூறியதாவது, நல்ல திட்டங்களையும் அரசியல் நோக்கத்திற்காக எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி திரித்து பேசுகிறார். இந்த பெயரை தான் வைக்க வேண்டும் என அரசாணையில் எதுவும் குறிப்பிடப்படவில்லை. பெயர் வைப்பது குறித்து அரசாணையில் வெளியிடப்பட்டுள்ளது வெறும் உதாரணம் மட்டும்தான்.
21 நாட்களுக்குள் வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிடப்பட்டு ஜாதிப் பெயர்கள் மாற்றப்படும். முதல்வர் ஸ்டாலின் நல்ல நோக்கத்துக்காக செய்வதை எடப்பாடி பழனிச்சாமி இழிவு படுத்துகிறார். கோவை மேம்பாலத்திற்கு ஜிடி நாயுடு பெயர் வைத்ததை குறை சொல்வதா. ஜிடி நாயுடு விஞ்ஞானி என அறியப்பட்டவர்.
இதில் நாயுடு என்பதை நீக்கிவிட்டு வெறும் ஜிடி பாலம் என்றா வைக்க முடியும். ஜிடி நாயுடு பாலம் என்று வைத்தால்தான் அவர் யார் என்பதை மக்கள் அறிந்து கொள்வார்கள். மேலும் ஜாதி பெயர் நீக்கம் தொடர்பான அரசாணை வெளியிடப்பட்டதால் அமைச்சர் தங்கம் தென்னரசு இவ்வாறு விளக்கம் கொடுத்துள்ளது குறிப்பிடத்தக்கதாகும்.
