பெங்களூரு கஸ்தூரிநகர் மெயின் ரோடு பகுதியில், லட்சுமி நரசிம்ஹா பேயிங் கெஸ்ட் தங்கும் விடுதியின் உரிமையாளரான மாதவ் மாட்லே என்பவர் அடித்துக் கொலை செய்யப்பட்டுள்ளார்.

மேலும் கடந்த திங்கள்கிழமை மாலை, அந்தப் பகுதிக்கு வந்த ராகேஷ் மற்றும் டான் பிரைட் சன் ஆகிய இரு கல்லூரி மாணவர்கள், பிஜி வளாகத்திற்குள் இருக்கும் குழாய் தண்ணீரில் தங்களது கால்களைக் கழுவியுள்ளனர். மது அருந்தியிருந்ததாகக் கூறப்படும் அந்த மாணவர்கள் இருவரும் அந்த விடுதியில் தங்குபவர்கள் அல்ல. இதனால், அவர்கள் உள்ளே நுழைந்து கால் கழுவுவதற்கு உரிமையாளர் மாதவ் மாட்லே கடுமையான எதிர்ப்பு தெரிவித்து வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார்.

இந்த வாக்குவாதம் இருதரப்பிற்கும் இடையே பெரும் மோதலாக மாறியது. இதனால் ஆத்திரமடைந்த மாதவ், மாணவர்களை தாக்குவதற்காக ஒரு கிரிக்கெட் பேட்டை எடுத்து வந்துள்ளார். ஆனால், அந்த மாணவர்கள் மாதவிடமிருந்து பேட்டைப் பறித்து, அவரையே அந்தப் பேட்டால் கொடூரமாகத் தாக்கியுள்ளனர்.

இதில் பலத்த காயமடைந்த மாதவ், மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்ட சில மணி நேரங்களிலேயே சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இச்சம்பவம் குறித்து ராமமூர்த்தி நகர் காவல்துறையினர் கொலை வழக்குப் பதிவு செய்து, தப்பியோடிய இரு மாணவர்களையும் கைது செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.