“விடுதலைச் சிறுத்தைகள் கட்சி வெறும் பதவிக்காக இயங்கும் கட்சியல்ல; கொள்கை பிடிப்புக்காகவே திமுக தலைமையிலான கூட்டணியில் நீடிக்கிறோம்” என்று அக்கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன் பேசினார். செங்கல்பட்டு மாவட்டம் கல்பாக்கம் அடுத்த புதுப்பட்டினத்தில், மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் செய்யூர் சட்டமன்றத் தொகுதி வேட்பாளர் சிந்தனைச் செல்வனை ஆதரித்து, பானை சின்னத்திற்கு வாக்கு சேகரிக்கும் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு திருமாவளவன் பேசியதாவது,
இந்தத் தொகுதியில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர், மக்கள் நலத் திட்டங்களைக் கூறி வாக்கு கேட்காமல், “வெற்றி பெற்றால் ஒவ்வொரு குடும்பத்திற்கும் பத்தாயிரம் ரூபாய் தருவேன்” என கூப்பன் கொடுத்து குறுக்கு வழியில் வெற்றி பெற முயல்கிறார். கட்சி தொடங்கிய முதல் தேர்தலிலேயே முதல்வர் ஆக வேண்டும் என்ற ஆசையில் ஒரு நடிகர் களமிறங்கியுள்ளார். பல ஆயிரம் கோடிகளை விட்டுவிட்டு மக்கள் பணிக்கு வந்திருப்பதாகக் கூறுவது வெறும் வேடம். அவர்கள் பதவி சுகத்திற்காகவே அரசியலுக்கு வந்துள்ளனர்.
விடுதலைச் சிறுத்தைகள் கட்சி நினைத்திருந்தால் பல கட்சிகளுடன் பேரம் பேசி அதிக இடங்களைப் பெற்றிருக்க முடியும். அதிமுக-வுடன் பேச்சுவார்த்தை நடத்திக்கொண்டே திமுக-விடம் சென்றிருந்தால் இன்னும் கூடுதலான தொகுதிகள் கிடைத்திருக்கும். ஆனால், அந்த வாய்ப்புகளைத் தவிர்த்துவிட்டு கொள்கைக்காகவே திமுக-வுடன் கரம் கோர்த்துள்ளோம்.
கடந்த மூன்று ஆண்டுகளாக அதிமுக-வுடன் கூட்டணி குறித்துப் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது உண்மைதான். ஒருவேளை நான் அதிமுக-வுடன் கூட்டணி வைத்திருந்தால், எடப்பாடி பழனிசாமி பாஜக-வுடன் கூட்டணி வைத்திருக்க மாட்டார். இன்றைய தேர்தல் களமே மாறியிருக்கும். எடப்பாடி பழனிசாமி எவ்விதக் காரணமுமின்றி பாஜக-வுடன் கூட்டணி வைத்து தமிழகத்திற்குத் துரோகம் செய்துள்ளார்.
தப்பித்தவறி எடப்பாடி பழனிசாமி மீண்டும் முதலமைச்சரானால், அடுத்த இரண்டு மாதங்களிலேயே அவரது பதவி பறிக்கப்படும். அவருக்குப் பதிலாக எச். ராஜா, அண்ணாமலை அல்லது நயினார் நாகேந்திரன் ஆகியோரில் ஒருவரைத் தமிழக முதல்வராக்க பாஜக காய் நகர்த்தும். தமிழகத்தின் உரிமைகளைக் காக்க தேசிய ஜனநாயகக் கூட்டணியைத் தவிர்த்து, மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியை மக்கள் ஆதரிக்க வேண்டும். எனவே, செய்யூர் தொகுதி வேட்பாளர் சிந்தனைச் செல்வனுக்கு பானை சின்னத்தில் வாக்களித்து பெருவாரியான வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறச் செய்ய வேண்டும் என அவர் கேட்டுக்கொண்டார்.
