இன்றைய காலத்தில் உடலை ஆரோக்கியமாக வைத்திருக்க வேண்டும் என்ற ஆர்வம் மக்களிடையே அதிகமாக உள்ளது. இதனால், உடற்பயிற்சி கூடங்களில் (ஜிம்) எப்போதும் கூட்டம் நிரம்பி வழிகிறது. ஜிம்முக்கு செல்பவர்களுக்கு நன்கு தெரியும், பிஸியான நேரங்களில் ஒவ்வொரு உபகரணத்திற்கும் வரிசையில் காத்திருக்க வேண்டியிருக்கும். ஒருவர் தனது பயிற்சியை முடிக்க நேரம் எடுத்தால், மற்றவர்கள் தங்கள் முறையை எதிர்பார்த்து காத்திருப்பார்கள். இந்த சமயங்களில், சிலர் எரிச்சல் அடைவதோ அல்லது சிறு வாக்குவாதத்தில் ஈடுபடுவதோ வழக்கம். ஆனால், சில நேரங்களில் இந்த வாக்குவாதம் பெரிய பிரச்சினையாக மாறிவிடுகிறது. அப்படி ஒரு சம்பவத்தின் வீடியோ தற்போது சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது.

வீடியோவில், ஜிம்மில் பலர் உபகரணங்களைப் பயன்படுத்த தங்கள் முறையை எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். அப்போது, நியான் வண்ண உடையணிந்த ஒரு பெண், யாரிடமும் கேட்காமல் நேரடியாக ஒரு உபகரணத்தை ஆக்கிரமித்து பயன்படுத்தத் தொடங்குகிறார். இதைப் பார்த்து, முன்பே காத்திருந்த இளம்பெண்ணுக்கு கோபம் வருகிறது. அவர், “நான் முதலில் காத்திருக்கிறேன், இது என் முறை” என்று கூறி அந்தப் பெண்ணைத் தடுக்கிறார். இங்கேயே பிரச்சினை முடிந்திருக்கலாம், ஆனால் நிலைமை திடீரென சூடாகிறது. இருவருக்கும் இடையே வாக்குவாதம் தொடங்குகிறது.

வாக்குவாதம் முற்றவே, அந்தப் பெண் இளம்பெண்ணைத் தள்ளிவிட, இளம்பெண்ணும் பதிலுக்கு தள்ளுகிறார். இதையடுத்து, இருவரும் ஒருவரை ஒருவர் கடுமையாகத் தாக்கிக்கொள்ளத் தொடங்குகின்றனர். முதலில், இது சாதாரண வாக்குவாதமாக முடிந்துவிடும் என்று அனைவரும் நினைத்தனர், ஆனால் சில நொடிகளில் நிலைமை மோசமாகிறது. இருவரும் ஒருவரது முடியைப் பிடித்து இழுத்து, கன்னத்தில் அறைவது, தள்ளுவது என்று ஜிம் ஒரு கணம் சண்டைக் களமாக மாறுகிறது. சுமார் இரண்டு நிமிடங்கள் இந்த இரு பெண்களுக்கும் இடையே கடுமையான மோதல் தொடர்கிறது. இறுதியாக, ஜிம்மில் இருந்த மற்ற பெண்கள் முன்வந்து, பெரும் முயற்சியுடன் இருவரையும் பிரித்து நிறுத்துகின்றனர். ஆனால், அதற்குள் இந்த முழு சம்பவமும் ஜிம்மில் இருந்த CCTV கேமராவில் பதிவாகிவிட்டது.

இந்த வீடியோவை சமூக ஊடகங்களில் பதிவேற்ற, அது வேகமாக வைரலாகியது. இந்த வீடியோவை @gharkekalesh என்ற X பக்கத்தில் பகிரப்பட்டு, இதுவரை 27,000-க்கும் மேற்பட்டோர் பார்த்துள்ளனர். கமெண்ட் பகுதியில், பயனர்கள் பலவிதமான கருத்துகளைப் பகிர்ந்து வருகின்றனர். சிலர் இந்த சம்பவத்தை வேடிக்கையாக எடுத்துக்கொண்டாலும், இது ஜிம்மில் ஒருவருக்கொருவர் மரியாதையுடன் நடந்துகொள்ள வேண்டியதன் முக்கியத்துவத்தை உணர்த்துகிறது.