பாகிஸ்தான் நாட்டின் கராச்சி நகரில் உள்ள பிரபல வணிக வளாகத்தில் நடந்த பரபரப்பான மோதல் தொடர்பான வீடியோ தற்போது இணையத்தில் தீயாய் பரவி வருகிறது. அங்குள்ள சன்ரைஸ் சூப்பர் மார்க்கெட்டில் ஷாப்பிங் செய்து கொண்டிருந்த பெண் ஒருவர், தன்னை ஒரு நபர் தவறான நோக்கத்தில் பின்தொடர்ந்து வந்து சீண்டியதாகக் கூறி கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். மாலில் இருந்த பாதுகாவலர்களை அழைத்து அந்த நபரை மடக்கிய அந்தப் பெண், “நான் ஒன்றும் சாதாரண ஆள் கிடையாது, என்னைப் பற்றி இணையத்தில் தேடிப் பாருங்கள்” என ஆக்ரோஷமாக எச்சரிக்கும் காட்சிகள் வீடியோவில் பதிவாகியுள்ளது.

இருப்பினும், குற்றம் சாட்டப்பட்ட நபர் தான் அந்தப் பெண்ணை பின்தொடரவில்லை என்றும், தனது அலைபேசியில் புகைப்படங்கள் மட்டுமே எடுத்துக் கொண்டிருந்ததாகவும் கூறி குற்றச்சாட்டை மறுத்துள்ளார். இந்தச் சம்பவம் சமூக வலைதளங்களில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. ஒரு தரப்பினர் அந்தப் பெண்ணின் துணிச்சலைப் பாராட்டினாலும், மற்றொரு தரப்பினர் முறையான சிசிடிவி (CCTV) ஆதாரங்கள் இன்றி ஒருவரை பொதுவெளியில் அவமானப்படுத்துவது தவறு என்றும், உண்மையை அறிய முழுமையான விசாரணை தேவை என்றும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.