மேரிலாந்து மாகாணத்தில் அரங்கேறிய ஒரு கொடூரச் சம்பவம் சமூக வலைதளங்களில் மீண்டும் வைரலாகி காண்போரை உறைய வைத்துள்ளது. உயிர்த்தோழி என நம்பிய பெண்ணே, கர்ப்பிணித் தோழியின் வயிற்றைக் கிழித்து குழந்தையைத் திருட முயன்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பாதிக்கப்பட்ட டெகா ஆடம்ஸ் என்ற பெண், வெரோனிகா டெராமஸ் என்ற பெண்ணை ஒரு தங்குமிடத்தில் சந்தித்துள்ளார். சில மணி நேரங்களிலேயே இருவரும் நெருங்கிய நண்பர்களாக மாறினர். ஆனால், வெரோனிகாவின் நோக்கம் வேறாக இருந்தது. டெகா தன் மீது வைத்திருந்த நம்பிக்கையைப் பயன்படுத்திக்கொண்ட வெரோனிகா, அவரைத் தனது வீட்டிற்கு வரவழைத்துள்ளார்.
‘மிரர் யுகே’ ஊடகத்தில் வெளியான செய்தியின்படி, டெகா வீட்டிற்கு வந்தவுடன் வெரோனிகா அவரைத் தாக்கியுள்ளார். ஒரு பெட்டி கட்டர் (Box Cutter) மூலம் டெகாவின் வயிற்றை வெரோனிகா கொடூரமாகக் கிழித்துள்ளார். டெகாவின் வயிற்றிலிருந்து குழந்தையைத் திருடுவதே வெரோனிகாவின் திட்டமாக இருந்துள்ளது. இந்தத் தாக்குதலின் கொடூரத்தால் டெகாவின் குடல்கள் வெளியே வந்த நிலையில், உயிருக்குப் போராடியுள்ளார்.
உயிருக்குப் போராடிய நிலையிலும், தனது பிறக்காத குழந்தையைக் காக்க வேண்டும் என்ற உறுதியுடன் டெகா செயல்பட்டுள்ளார். வெளியே வந்த தனது குடல்களைக் கைகளால் பிடித்துக்கொண்டே, அந்த வீட்டிலிருந்து தப்பித்து உதவி கிடைக்கும் வரை ஓடியுள்ளார்.
இந்தத் துணிச்சலான போராட்டத்தின் பலனாக, டிசம்பர் 6, 2009 அன்று டெகாவுக்கு ஒரு பெண் குழந்தை பிறந்தது. அந்தத் துயரத்திலிருந்து மீண்டு வந்ததற்கு அடையாளமாகத் தனது மகளுக்கு ‘மிராக்கிள்’ (Miracle – அதிசயம்) என்று அவர் பெயரிட்டார்.
வழக்கு விசாரணையின் போது நீதிமன்றத்தில் ஆஜரான டெகா உருக்கமாகப் பேசினார். “நான் மட்டும் இன்னும் ஒரு நிமிடம் அங்கு இருந்திருந்தால், நானும் என் குழந்தையும் உயிருடன் இருந்திருக்க மாட்டோம்” என்று கூறினார். மேலும், குற்றம் சாட்டப்பட்ட வெரோனிகாவிடம் தனது மகளைக் காண்பித்து, “நீ என்னிடமிருந்து பறிக்க முயன்ற குழந்தை எவ்வளவு அழகாக இருக்கிறாள் பார்” என்று சவாலாகக் கூறினார்.
தன் மீதான குற்றச்சாட்டிலிருந்து தப்பிக்க, டெகா தனது குழந்தையை $5,000-க்கு விற்க முயன்றதாகவும், தான் போதையில் இருந்ததால் எதுவும் நினைவில் இல்லை என்றும் வெரோனிகா பல பொய்களைக் கூறினார்.
வெரோனிகாவின் அனைத்து வாதங்களையும் நிராகரித்த நீதிபதி சி. பிலிப் நிக்கோல்ஸ் ஜூனியர், அவருக்குக் கடுமையான தண்டனைகளை விதித்தார். கொலை முயற்சி மற்றும் தாக்குதலுக்காக: 25 ஆண்டுகள் சிறைத்தண்டனை.தவறான சிறை வைப்புக்காக (False Imprisonment): ஆயுள் தண்டனை. ஒரு தாயின் உறுதியால் மரணத்தின் பிடியிலிருந்து ஒரு உயிர் மீட்கப்பட்ட இந்தச் சம்பவம், இன்றும் பலருக்கு நம்பிக்கையையும் அதே சமயம் அதிர்ச்சியையும் அளித்து வருகிறது.
