பெங்களூருவில் எடுக்கப்பட்ட ஒரு வீடியோ இணையத்தில் சமீபத்தில் மிகவும் வைரலாகி, பலருடைய பாராட்டுக்களைப் பெற்றது. இந்த நகரத்தைப்பற்றி வரும் பல வீடியோக்கள் சண்டை அல்லது போக்குவரத்து நெரிசலைக் காட்டுவதாக இருக்கும் நிலையில், இந்த வீடியோ மிகவும் வித்தியாசமானது. இதில் ஒரு பெண் பயணி, இரவு நேரத்தில் ‘ரேபிடோ’ ஆட்டோவில் பயணம் செய்தபோது, ஆட்டோ ஓட்டுநரின் இருக்கைக்குப் பின்னால் ஒட்டப்பட்டிருந்த ஒரு கையெழுத்துப் பதிவைப் பார்த்தார். அந்தப் பதிவைப் படித்தவுடன், அவருக்கு மனதிற்கு மிகவும் பாதுகாப்பாக இருப்பதாக உணர்ந்தார்.

​அந்த ஆட்டோ ஓட்டுநர் ஒட்டியிருந்த பதிவில், “நானும் ஒரு தந்தை, சகோதரனும் கூட. உங்கள் பாதுகாப்பு எனக்கு முக்கியம். நிம்மதியாக அமர்ந்து செல்லுங்கள்” என்று குறிப்பிடப்பட்டிருந்தது. நள்ளிரவு 12 மணிக்கு தனியாகப் பயணம் செய்த அந்தப் பெண்ணுக்கு, இந்த வார்த்தைகள் மிகவும் ஆறுதலாகவும் நம்பிக்கையாகவும் இருந்தது. இந்தச் சிறிய செயல், ஆட்டோ ஓட்டுநரின் அக்கறையையும் மனிதாபிமானத்தையும் காட்டியதால், சமூக வலைதளங்களில் இந்த வீடியோ பரவலாகப் பகிரப்பட்டுப் பாராட்டுகளைப் பெற்றது.