ஜம்முவில் கடும் குளிரால் தன் மகன் பாதிக்கப்படக்கூடாது என்ற நோக்கில், வீரமரணம் அடைந்த மகனின் சிலைக்குத் தாய் ஒருவர் போர்வை போர்த்திய நெகிழ்ச்சியான வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. ஜம்முவின் ரன்பீர் சிங் போரா பகுதியைச் சேர்ந்த ஜஸ்வந்த் கவுர் என்பவரின் மகன் குர்நாம் சிங், எல்லைப் பாதுகாப்புப் படையில் காவலராகப் பணியாற்றி வந்தார்.

கடந்த 2016-ஆம் ஆண்டு பயங்கரவாதிகளின் ஊடுருவலை முறியடிக்கும் முயற்சியில் ஈடுபட்டபோது அவர் வீரமரணம் அடைந்தார். மகனைப் பறிகொடுத்தாலும், அவரது நினைவாக ஊரில் நிறுவப்பட்டுள்ள சிலையையே தன் உயிருள்ள மகனாகக் கருதி ஜஸ்வந்த் கவுர் இன்றும் பாசத்தைப் பொழிந்து வருகிறார்.

“>

தற்போது ஜம்முவில் நிலவும் கடும் குளிரிலிருந்து தன் மகனைக் காப்பதாக எண்ணி, அந்தத் தாய் சிலைக்குப் போர்வை போர்த்திய காட்சி காண்போரை கண்கலங்கச் செய்துள்ளது. ஒரு தாய் தன் பிள்ளையின் மீதான மாறாத அன்பையும், தேசத்திற்காக உயிர்நீத்த மகனை இழந்த வலியையும் ஒருசேர வெளிப்படுத்தும் இந்த வீடியோ சமூக வலைதளங்களில் பலராலும் பகிரப்பட்டு வருகிறது.

இந்நிலையில் “ஒரு தாயின் அன்பு எல்லையற்றது” என்றும், “நாட்டுக்காக உயிரைத் தியாகம் செய்த வீரனுக்கும் அவனது தாய்க்கும் எமது வணக்கங்கள்” என்றும் நெட்டிசன்கள் தங்களது உணர்ச்சிகரமான கருத்துகளைப் பதிவிட்டு வருகின்றனர்.