ஜம்மு காஷ்மீர் மாநிலம் ராம்பன் பகுதியில், வாயில்லா ஜீவனான நாய் ஒன்றின் காதை கோடரியால் வெட்டிச் சிதைத்த சிறுவர்களின் செயல் சமூக வலைதளங்களில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. விலங்கு நல ஆர்வலர்களின் புகாரைத் தொடர்ந்து, போலீசார் நடவடிக்கை எடுக்கத் தொடங்கியுள்ளனர்.
சமூக வலைதளங்களில் ‘வியூஸ்’ மற்றும் கவனத்தை ஈர்ப்பதற்காக, இரண்டு சிறுவர்கள் ஒரு நாயைக் கட்டிப்போட்டு அதன் காதை கல்லின் மீது வைத்து கோடரியால் வெட்டும் நெஞ்சை உறைய வைக்கும் வீடியோவை வெளியிட்டுள்ளனர். அந்த நாய் வலியால் துடித்த போதிலும், சிறுவர்கள் எவ்வித இரக்கமுமின்றி இந்தச் செயலைத் திட்டமிட்டுச் செய்துள்ளனர்.
View this post on Instagram
‘காஷ்மீர் விலங்கு உதவி’ (Kashmir Animal Welfare) அமைப்பு இந்த வீடியோவை முதன்முதலில் கண்டறிந்து வெளிச்சத்திற்குக் கொண்டு வந்தது. மேலும், அந்த வீடியோவில் இருந்த நபர்களின் விவரங்களைச் சேகரித்து, அவர்களில் ஒருவனைத் தொலைபேசி வாயிலாகத் தொடர்பு கொண்டு அந்த அமைப்பைச் சேர்ந்த பெண்மணி ஒருவர் விளக்கம் கேட்டார்.
“விலங்குகளுக்கும் நம்மைப் போலவே வலிக்கும் என்பது உங்களுக்குத் தெரியாதா? உங்களை யாராவது இப்படிச் செய்தால் எப்படி இருக்கும்?” என அவர் ஆவேசமாகக் கேள்வி எழுப்பினார். ஆனால், குற்றம் செய்த சிறுவன் தான் அதைச் செய்யவில்லை என்றும், தனது நண்பன்தான் வெட்டினான் என்றும் கூறி தப்பிக்க முயன்றான்.
இந்த விவகாரத்தில் சம்பந்தப்பட்ட சிறுவர்கள் மீது கடுமையான சட்டப்பிரிவுகளின் கீழ் முதல் தகவல் அறிக்கை (FIR) பதிவு செய்யப்படும் என்று அந்த அமைப்பு உறுதியளித்துள்ளது. மேலும், மாவட்ட அதிகாரிகளிடம் புகார் அளிக்கப்பட்டு, சட்ட நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.
இந்தச் சம்பவம் குறித்து சமூக வலைதளங்களில் கருத்து தெரிவித்துள்ள நெட்டிசன்கள், “இந்தச் சிறுவர்கள் உண்மையில் மனநலம் பாதிக்கப்பட்டவர்கள். இவர்களுக்குத் தக்க தண்டனை வழங்கப்பட வேண்டும்” என்றும், “அந்த நாய் தற்போது எங்கே இருக்கிறது? அது மீட்கப்பட்டதா?” என்றும் ஆதங்கத்துடன் கேள்வி எழுப்பி வருகின்றனர். குரலற்ற விலங்குகளுக்கு எதிராக நடத்தப்படும் இதுபோன்ற வன்முறைகள் தண்டிக்கப்படாமல் போகக்கூடாது என்பதே அனைவரின் கோரிக்கையாக உள்ளது.
