பாலிவுட் மற்றும் அசாமி இசைப் பாடல்களில் தனித்துவம் பெற்ற பாடகர் ஜூபீன் கார்க் கடந்த செப்டம்பர் 19-ஆம் தேதி சிங்கப்பூரில் மரணமடைந்தது இசை ரசிகர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அவர் படகுப் பயணத்தின் போது நீந்தச் சென்றபோது உயிரிழந்ததாக முதற்கட்ட தகவல்கள் வெளியாகின.

இந்நிலையில், அவரது மரணத்தில் கொலைக்கு இடமளித்தது போல சந்தேகிக்கப்படும் தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த வழக்கில் அசாம் காவல்துறை நான்கு பேரை கைது செய்துள்ளது.

அதன் படி ஜூபீனின் மேலாளர் சித்தார்த் சர்மா, நிகழ்ச்சி ஏற்பாட்டாளர் ஷ்யாம்கானு மஹந்தா, இசைக்கலைஞர் அம்ரித்பிரவா மஹந்தா, இசைக்குழு உறுப்பினர் சேகர் ஜோதி கோஸ்வாமி ஆகியோர் ஆவார். இதில் முக்கியமான குற்றச்சாட்டு, சேகர் ஜோதி கோஸ்வாமியிடமிருந்து வந்தது.

அவரது கூற்றுப்படி, ஜூபீனுக்கு விஷம் கொடுக்கப்பட்டிருக்கலாம் என சந்தேகம் எழுந்துள்ளது. மேலாளர் சர்மா, இந்த கொலைச் செயலுக்கு வெளிநாட்டு இடத்தை திட்டமிட்டு தேர்வு செய்ததாகவும் கூறப்படுகிறது.

சிங்கப்பூரின் பான் பசிபிக் ஹோட்டலில் ஜூபீனுடன் தங்கியிருந்த மேலாளர் சர்மா, மரணத்துக்கு முன் சந்தேகத்திற்கிடமான செயல்களில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. படகின் கட்டுப்பாட்டை சர்மா வலுக்கட்டாயமாக எடுத்துக் கொண்டதாகவும்,  பானங்களை யாரும் வழங்க வேண்டாம் என்றும், தான் மட்டுமே வழங்குவதாக கூறியதாக கூறியுள்ளார்.

ஜூபீன் மூச்சுத் திணறும் நேரத்தில் அவரை விட்டுவிடுங்கள் என தான் கூறியதாக கோஸ்வாமி வாக்குமூலம் அளித்துள்ளார். மேலும், ஜூபீனின் முகம் மற்றும் மூக்கில் நுரை வந்ததாக, ஆனால் சர்மா அதை அமில ரிஃப்ளக்ஸ் என நிராகரித்ததாகவும் தெரிவித்தார். நீச்சலில் பயிற்சி பெற்றவர் ஜூபீன் கார்க். எனவே, அவர் எளிதில் நீரில் மூழ்கி இறந்திருக்க முடியாது என கோஸ்வாமி வலியுறுத்தியுள்ளார்.

அத்துடன், படகு பயண வீடியோக்களை யாருடனும் பகிரக்கூடாது என மேலாளர் சர்மா கூறியதாகவும் அவர் வாக்குமூலம் அளித்துள்ளார். சாட்சிகள், வீடியோ ஆதாரங்கள், நிதி விவரங்கள் அனைத்தும் சர்மாவுக்கெதிராக இருக்கும் நிலையில், அவர் மீது கொலைக்குற்றம் உள்ளிட்ட குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டுள்ளது.

இதற்கிடையல் ஜூபீனின் மனைவி கரிமா சைகியா கார்க், இந்தியா டுடே தொலைக்காட்சிக்கு அளித்த நேர்காணலில், அவரது மரணம் இயற்கையல்ல என தெளிவாகத் தெரிவித்தார். “அவருக்கு இதயக் கோளாறு இல்லை. நீந்தவோ, நீருக்கு அருகில் செல்லவோ கூடாது என மருத்துவர்கள் எச்சரித்திருந்தனர். ஆனால் அவரை நீரில் இறக்கினர். லைஃப் ஜாக்கெட்டும் இல்லை. இது சந்தேகமாக இருக்கிறது,” என்று கரிமா கூறினார்.

இந்நிலையில் இந்த வழக்கில் ஏற்பட்டுள்ள அதிர்ச்சிகர திருப்பத்தையடுத்து, அசாம் முதல்வர் ஹிமந்தா பிஸ்வா சர்மா, பாடகரின் மரணம் தொடர்பாக நீதித்துறை விசாரணை ஆணையம் அமைக்கப்படும் என அறிவித்துள்ளார். மேலும் நாட்டையே உலுக்கிய பிரபல பாடகர் மரணத்தின் அவர் விஷம் கொடுத்துக்கொல்லப்பட்டதாக வெளிவந்த செய்தி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.