காதல் தொடர்பில் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால், 17 வயது பள்ளி மாணவியை கொலை செய்து, பின்னர் வாலிபர் தற்கொலை செய்து கொண்டுள்ள கொடூர சம்பவம் ஆந்திர மாநிலம்  காக்கிநாடா மாவட்டம் துர்காடா பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. துர்காடா பகுதியை சேர்ந்த தீப்தி (17) பிளஸ்-2 வகுப்பில் பயின்றுவந்தார். அதே பகுதியை சேர்ந்த அசோக் (19) என்பவரும் மாணவியும் காதலித்ததாக கூறப்படுகிறது.

தசரா பண்டிகையை முன்னிட்டு பள்ளிக்கு விடுமுறை இருந்ததால், தீப்தி காக்கிநாடா நகரில் உள்ள உறவினர் வீட்டுக்குச் சென்றார். இதை அறிந்த அசோக்கும் அங்கு சென்றுள்ளார். அந்த இடத்தில், தீப்தியை தனியாக அழைத்த அசோக், காட்டேறு கால்வாய்க்கரை அருகே  அழைத்து சென்றதாக தெரிவிக்கப்படுகிறது. அங்கு திடீரென அசோக் தனது கையில் வைத்திருந்த பிளேடால் தீப்தியின் கழுத்தை அறுத்து கொலை செய்தார். அதிக ரத்தப்போக்கால் தீப்தி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

இதனையடுத்து அசோக்  ரெயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டார். தகவல் அறிந்து வந்த போலீசார், இருவரின் உடல்களையும் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார், வாலிபர் தனது காதலியை கொலை செய்து தற்கொலைக்கு முயன்றதற்கான காரணங்களை தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.