தமிழக அரசு யாரையும் போட்டியாகக் கருதவில்லை; அனைவரையும் நண்பர்களாகவே கருதுகிறோம்” என்று போக்குவரத்துத் துறை அமைச்சர் எஸ்.எஸ். சிவசங்கர் தெரிவித்துள்ளார்.

அரியலூர் மாவட்டம், கீழப்பழுவூரில் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், தமிழக அரசியல் சூழல் மற்றும் நலத்திட்டங்கள் குறித்துக் கூறியதாவது,

தங்கள் கட்சியை (த.வெ.க.) திமுக போட்டியாகக் கருதுவதாக விஜய் தெரிவித்துள்ளார். ஆனால், திமுக யாரையும் போட்டியாகக் கருதவில்லை. அனைவரையும் நண்பர்களாகவே பார்க்கிறோம். எல்லோரையும் தாண்டி திராவிட மாடல் அரசின் செயல்பாடுகள் மக்களிடம் சென்றடைந்துள்ளன. மக்கள் மனதில் முதல்வர் மு.க. ஸ்டாலின் நீங்கா இடம்பிடித்துள்ளார். மக்கள் அவர் பின்னால் அணிதிரண்டு நிற்கிறார்கள்.

மகளிர் உரிமைத் தொகையாக ரூ. 5,000 வழங்கியது குறித்து முதல்வர் ஏற்கனவே விளக்கம் அளித்துள்ளார். சில குறுக்கு மதியாளர்கள் இந்தத் திட்டத்திற்கு நீதிமன்றம் மூலம் தடை வாங்க முயற்சி செய்தார்கள். அதற்கு இடம் கொடுக்காமல் இருக்கவே, தேர்தலுக்கு முன்பாகவே இந்தத் தொகை வழங்கப்பட்டுள்ளது. கடந்த 28 மாதங்களாக வழங்கப்பட்ட உரிமைத் தொகை தொடர்ந்து கிடைக்க வேண்டும் என்ற நோக்கில் 3 மாதத் தொகை முன்கூட்டியே அளிக்கப்பட்டுள்ளது.

பாஜக ஆளும் பீகாரில் மகளிர் உரிமைத் தொகைத் திட்டமே கிடையாது. ஆனால் தேர்தலின் போது திடீரென 10 மாதத் தொகையைச் சேர்த்துப் பிரதமரே வழங்கினார். இதைப் பற்றி யாரும் கேள்வி கேட்பதில்லை.

அதிமுக அரசு தமிழகத்தின் அதிகாரத்தை மத்திய அரசிடம் அடகு வைத்ததை முன்னாள் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசனே ஒப்புக்கொண்டுள்ளார். மோடியைத் தன் மீது சவாரி செய்ய அதிமுக அனுமதித்ததால் தான் நீட், உதய் மின் திட்டம் போன்றவை தமிழகத்திற்குள் திணிக்கப்பட்டன. அதிமுக அரசு அமைந்தால் மோடி தான் ஆட்சி செய்வார் எனக் கூறி தமிழகத்தின் கதவுகளைத் திறந்துவிட்டார்கள். இவ்வாறு அவர்  கூறினார்.