பாட்டாளி மக்கள் கட்சியின் முதல் எதிரி திமுக தான் என்றும், அக்கட்சியை அடுத்த கட்டத்திற்குக் கொண்டு செல்லத் தொண்டர்கள் உழைக்க வேண்டும்” என்றும் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் மற்றும் கட்சிக்குள் நிலவும் சூழல் குறித்து அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது, பாமக நிறுவனர் ராமதாஸைச் சுற்றியுள்ள தீய சக்திகள், அவரது மனதை முழுமையாக மாற்றிவிட்டார்கள்.
பாமக-வின் கட்சிப் பெயர் மற்றும் சின்னம் தொடர்பாக ராமதாஸ் தரப்பிலிருந்து திட்டமிட்டுப் பொய்களைப் பரப்பி வருகின்றனர். கட்சியில் பதவிப் போட்டி மற்றும் சண்டையை உருவாக்கி, குழப்பத்தை ஏற்படுத்தியது திமுக-தான்.
திமுக-வின் செயல்பாடுகள் மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகள் குறித்து அன்புமணி ராமதாஸ் பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளார். வன்னியர் சமூக மக்களை திமுக ஏமாற்றிவிட்டது; தற்போது மக்கள் திமுக மீது கடும் வெறுப்பில் உள்ளனர். பாட்டாளி மக்கள் கட்சியின் உண்மையான எதிரி திமுக-தான் என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை.
காங்கிரஸ் கட்சியை திமுக-வே தோற்கடித்துவிடும். தேர்தலில் வெற்றி பெற்றால் தானே அவர்கள் ஆட்சியில் பங்கு கேட்பார்கள்? அதனால் காங்கிரஸை வீழ்த்துவதே திமுக-வின் நோக்கமாக உள்ளது.
கட்சிக்குள் நிலவும் குழப்பங்களைக் கடந்து, பாட்டாளி மக்கள் கட்சியை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்ல வேண்டும் என்று தனது தொண்டர்களுக்கு அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
