தமிழக அரசு ரூ. 5,000 அல்ல, ரூ. 50,000 அறிவித்தாலும் மக்களை ஏமாற்ற முடியாது” என்று அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் மதுரையில் செய்தியாளர்களிடம் பேசுகையில் தெரிவித்துள்ளார்.

மதுரையில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்த டிடிவி தினகரன், திமுக அரசு மீதும் அதன் தேர்தல் உத்திகள் குறித்தும் கடுமையான விமர்சனங்களை முன்வைத்தார். அவர் பேசியதாவது:

தேர்தல் நெருங்கும் வேளையில் ரூ. 5,000 வழங்குவது, கடைத் தேங்காயை எடுத்து வழிப் பிள்ளையாருக்கு உடைப்பதைப் போன்றது. தோல்வி பயம் வந்துவிட்டதால்தான் திமுக இத்தகைய அறிவிப்புகளை வெளியிடுகிறது.

தமிழகத்தில் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு இல்லை; போதை கலாச்சாரம் பெருகிவிட்டது. குறிப்பாக, பெண்கள் மற்றும் குழந்தைகளுக்குப் பாதுகாப்பற்ற சூழல் நிலவுகிறது. அதிமுகவை ஒரு அணியாக இணைத்துவிட்டோம். இதைக் கண்டு திமுக அஞ்சத் தொடங்கியுள்ளது.

தொடர்ந்து பேசிய அவர், “கடந்த 7, 8 ஆண்டுகளாக அம்மாவின் ஆட்சி அமைய வேண்டும் என்று விரும்பிய அனைவரும் ஒன்றிணைய வேண்டும். விரைவில் மத்தியில் தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி அமைந்தவுடன், தமிழகத்தில் உள்ள அனைத்துக் குறைகளும் நீக்கப்படும்” என்றார்.

மேலும் திமுக மற்றும் காங்கிரஸ் கட்சிகளுக்கு இடையே தற்போது ‘பனிப்போர்’ நடைபெற்று வருவதாகக் குறிப்பிட்ட அவர், தமிழகத்தில் நிலவும் திமுகவின் ‘ஊழல் ஆட்சி’ அகற்றப்பட வேண்டும் என்பதே தங்களின் நோக்கம் என்று தெரிவித்தார். இந்த முறை தமிழகத்தில் மீண்டும் ‘அம்மாவின் மக்களாட்சி’ மலரும் என்றும் அவர் உறுதிபடக் கூறினார்.