தமிழகத்தில் 2026-ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தல் நெருங்கி வரும் சூழலில், திமுக கூட்டணியில் அங்கம் வகிக்கும் காங்கிரஸ் கட்சி ‘ஆட்சியில் பங்கு’ கேட்டு போர்க்கொடி தூக்கியுள்ளது. அண்மையில் ஊடக நிகழ்ச்சி ஒன்றில் பேசிய முதல்வர் மு.க.ஸ்டாலின், “ஆட்சியில் பங்கு என்பது தமிழ்நாட்டிற்கு ஒத்து வராது; திமுக எப்போதும் தனித்த பெரும்பான்மையுடன் ஆட்சி செய்வதையே விரும்புகிறது” எனத் திட்டவட்டமாகத் தெரிவித்தார்.

மேலும் முதல்வரின் இந்த கருத்துக்குத் தமிழக காங்கிரஸ் தலைவர்களிடையே அதிருப்தி எழுந்துள்ள நிலையில், விருதுநகர் நாடாளுமன்ற உறுப்பினர் மாணிக்கம் தாகூர் தனது ‘எக்ஸ்’ தளத்தில் இதற்குப் பகிரங்கமாகப் பதிலடி கொடுத்துள்ளார்.

இந்நிலையில் மாணிக்கம் தாகூர் தனது பதிவில், “தமிழகத்தில் கூட்டணி ஆட்சியா அல்லது ஒரு கட்சி ஆட்சியா என்பதை மக்கள் தான் முடிவு செய்வார்கள்” என்று குறிப்பிட்டுள்ளார். மேலும், 2006-ஆம் ஆண்டு தேர்தலைச் சுட்டிக்காட்டிய அவர், “அன்று மக்கள் அளித்த தீர்ப்பைச் செயல்படுத்தாமல் விட்டது எங்கள் தவறு” என்று பதிவிட்டுள்ளார்.

இதனால் 2006-ல் திமுக 96 இடங்களை மட்டுமே பெற்றிருந்த நிலையில், காங்கிரஸ் கட்சியின் 34 எம்.எல்.ஏ-க்களின் ஆதரவுடன்தான் மைனாரிட்டி ஆட்சி நடத்தியது. அந்த வரலாற்றை நினைவுபடுத்தி, வரும் தேர்தலில் காங்கிரஸ் தனது உரிமையை விட்டுக்கொடுக்காது என்பதை மாணிக்கம் தாகூர் இடித்துரைத்துள்ளார். இது திமுக-காங்கிரஸ் கூட்டணியில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.