அதிமுக கூட்டணியில் இணைந்தது குறித்துப் பேசிய டிடிவி தினகரன், “அம்மாவின் ஆட்சி மீண்டும் அமைய வேண்டும் என்பதே எங்கள் இலக்கு” எனத் திட்டவட்டமாகக் கூறியுள்ளார். அதிமுகவை ஊழல் கட்சி என விமர்சிக்கும் விஜய், அதே கட்சியில் இருந்து வந்த செங்கோட்டையனை மட்டும் தன் கட்சியில் சேர்த்துக் கொண்டது என்ன மாதிரியான கொள்கை என்று எனக்குப் புரியவில்லை எனச் சாடியுள்ளார். மேலும், செங்கோட்டையன் தன்னை தவெக-வுக்கு அழைத்ததாகவும், நட்பின் காரணமாகப் ‘பார்ப்போம்’ என்று சொன்னதாகவும் அவர் ஒரு பெரிய குண்டைத் தூக்கிப் போட்டுள்ளார்.

​தன்னை யாரும் மிரட்டவோ, அழுத்தம் கொடுக்கவோ முடியாது என்று கூறிய தினகரன், எடப்பாடி பழனிசாமியின் அழைப்பை ஏற்று ஜெயலலிதா ஆட்சி மீண்டும் மலர வேண்டும் என்ற ஒரே காரணத்திற்காகவே கூட்டணிக்கு வந்ததாகக் குறிப்பிட்டுள்ளார். ஓபிஎஸ் ஒருபோதும் திமுக-வுக்குச் செல்ல மாட்டார் என்றும், அவர் தங்களுடன் இணைய வேண்டும் என்பதே தனது விருப்பம் என்றும் கூறியுள்ளார். மேலும், அமைச்சரவையில் இடம் கிடைக்க வேண்டும் என்பது தனது ஆசை என்றும், கூட்டணி ஆட்சி அமையாது என்று எதையும் இப்போதே சொல்ல முடியாது என்றும் அரசியல் அதிரடியைக் கிளப்பியுள்ளார்.