முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு, உலக நாயகன் கமல்ஹாசனை விமர்சித்ததற்கு மக்கள் நீதி மய்யத்தின் மாநில இளைஞரணி செயலாளர் சினேகன் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். மதுரையில் செய்தியாளர்களைச் சந்தித்த செல்லூர் ராஜு, ஊழலை ஒழிப்பதாகக் கூறி அரசியலுக்கு வந்த கமல்ஹாசன், தற்போது திமுகவுடன் கூட்டணி சேர்ந்து ஒரு நகைச்சுவை நடிகரைப் போல மாறிவிட்டார் என்று விமர்சித்திருந்தார்.

​செல்லூர் ராஜுவின் இந்த கருத்துக்குப் பதிலடி கொடுத்துள்ள சினேகன், அவரை “நிதானமின்றி பேசும் ஒரு அரசியல் காமெடியன்” என்று சாடியுள்ளார். குறிப்பாக, வைகை அணையில் நீரைச் சேமிக்க தெர்மாகோல் போட்டு மூடிய விவகாரத்தைக் குறிப்பிட்டுப் பேசிய சினேகன், “உலகமே பார்த்துச் சிரித்த தெர்மாகோல் வித்தையைக் காட்டியவர் தான் இந்த செல்லூர் ராஜு; அப்படிப்பட்டவர் கமல்ஹாசனை விமர்சிப்பது நகைப்புக்குரியது” எனப் போட்டுத் தாக்கியுள்ளார். கமல்ஹாசனின் அரசியல் நேர்மையைப் பற்றிப் பேசும் தகுதி ‘தெர்மாகோல்’ ராஜுவுக்கு இல்லை என்றும் அவர் காரசாரமாகத் தெரிவித்துள்ளார்.