“குடும்பம் நடத்த வரலைன்னு சொன்னா உன்னை சும்மா விடமாட்டேன்!” என்று ஆக்ரோஷமாகக் கத்திய கணவன், காரிலேயே மனைவியின் முகத்தில் மிளகாய்பொடி தூவி, அவரது கால்களைக் கொடூரமான முறையில் வெட்டிச் சாய்த்துள்ள பகீர் சம்பவம் நீலகிரி மற்றும் கேரளா எல்லையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கேரள மாநிலம் கண்ணூரைச் சேர்ந்த பிஜூ என்பவருக்கும், கர்நாடகாவைச் சேர்ந்த மல்லிகா என்ற பெண்ணுக்கும் இடையே ஏற்பட்ட குடும்பத் தகராறு காரணமாக, மல்லிகா தனது இரண்டு குழந்தைகளுடன் கோபித்துக் கொண்டு நீலகிரி மாவட்டம் பந்தலூரில் உள்ள உறவினர் வீட்டில் வாடகைக்குக் குடியேறியுள்ளார்.
இந்த நிலையில், மனைவியைச் சமாதானம் செய்து கேரளாவுக்கு அழைத்துச் செல்வதற்காகப் பந்தலூருக்கு காரில் வந்த பிஜூ, மல்லிகாவை காரில் ஏற்றிக்கொண்டு வயநாடு மாவட்டம் மேப்பாடி வரை சென்றுள்ளார்.
அப்போது காரில் இருவருக்கும் இடையே மீண்டும் வாக்குவாதம் வெடிக்க, ஆத்திரத்தின் உச்சக்கட்டத்திற்குச் சென்ற பிஜூ, தான் மறைத்து வைத்திருந்த மிளகாய்பொடியை மல்லிகாவின் முகத்தில் தூவி, அரிவாளால் அவரது கால்களைக் கொடூரமாக வெட்டித் துண்டித்துள்ளார்.
மல்லிகாவின் அலறல் சத்தம் கேட்டு ஓடிவந்த பொதுமக்கள் அவரை மீட்டு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்க, தப்பியோட முயன்ற கொடூரக் கணவன் பிஜூவை போலீஸார் அதிரடியாகக் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.
