சேலம் அருகே உள்ள நெய்க்காரப்பட்டி பகுதியைச் சேர்ந்த மளிகைக் கடை  தமிழக உரிமையாளரும் வெற்றிக் கழக (த.வெ.க.) பிரமுகருமான மணிகண்டன் (40) என்பவர், பெண்களை ஏமாற்றி ஆபாச வீடியோ எடுத்து மிரட்டிய புகாரில் கொண்டலாம்பட்டி போலீசாரால் அதிரடியாகக் கைது செய்யப்பட்டுள்ளார். கணவரை பிரிந்து வாழும் பெண் ஒருவருக்கு நிதி நிறுவனங்கள் மூலம் கடன் வாங்கித் தந்து பழகிய மணிகண்டன், அந்தப் பெண்ணுடன் நெருக்கமாக இருந்துள்ளார்.

ஒருகட்டத்தில் மணிகண்டனின் செல்போனைப் பார்த்த அந்தப் பெண், அதில் பல பெண்களின் ஆபாச வீடியோக்கள் இருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்து அவரிடமிருந்து விலகியுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த மணிகண்டன், அந்தப் பெண்ணை அச்சுறுத்தி மீண்டும் வருமாறு மிரட்டியதாகக் கூறப்படுகிறது.

இதுகுறித்து பாதிக்கப்பட்ட பெண் வெளியிட்ட ஆடியோ சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதுபற்றி அறிந்த சேலம் மாநகர போலீஸ் கமிஷனர் அனில்குமார் கிரி, உடனடியாக நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார். இதன்பேரில், கொண்டலாம்பட்டி போலீசார் மணிகண்டனைப் பிடித்து தீவிர விசாரணை நடத்தினர்.

அவரது செல்போனைப் பறிமுதல் செய்து ஆய்வு செய்தபோது, அதில் 50-க்கும் மேற்பட்ட பெண்களின் ஆபாச வீடியோக்கள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதன் மூலம் அவர் பல பெண்களைத் தன் வலையில் வீழ்த்தி, ஆபாச வீடியோ எடுத்து மிரட்டி வந்த அதிர்ச்சி உண்மை அம்பலமானது. இதையடுத்து மணிகண்டன் மீது வழக்குப் பதிவு செய்த போலீசார் அவரைச் சிறையில் அடைத்தனர்.