காட்டில் சிங்கத்தை கண்டதுமே மனிதர்களுக்கு ஏற்படும் பீதி சொல்லித் தீராது. அதன் வலிமை, கர்ஜனை, கூர்மையான பார்வை – இவை அனைத்தும் அதை காட்டின் அரசனாக உருவாக்குகின்றன. ஆனால் சமீபத்தில் இணையத்தில் வைரலாகும் ஒரு வீடியோ,சிங்கத்தின் ஒரு புதிய முகத்தை உலகிற்கு காட்டியுள்ளது. சமூக வலைதளமான X-இல் பகிரப்பட்டுள்ள இந்த வீடியோவில், ஒரு சஃபாரி ஜீப்பின் மீது சிங்கமும், பெண் சிங்கமும் ஏறி அமர்ந்து பயணிக்கும் காட்சி  பதிவாகியுள்ளது. இதில் காணப்படும் சிங்கங்கள், பரம்பரை வன்முறை அல்லது ஆபத்தை ஏற்படுத்தவில்லை; மாறாக, மனிதர்களைப் போலவே சஃபாரி அனுபவிப்பது போல் அமைதியுடன் நடந்துகொள்கின்றன.

 

வீடியோவில், சுற்றுலாப் பயணிகள் அமர்ந்திருந்த ஒரு திறந்த ஜீப்பை சுற்றி, இரண்டு சிங்கங்கள் நிதானமாக நடந்து வந்து, வாகனத்தின் மீது ஏறுகின்றன. ஆண் சிங்கம் ஜீப்பின் முன்பக்கத்தில் நிற்கும் நிலையில், பெண் சிங்கம் வண்டியின் மேல்பக்கம்  ஏறி அமைதியாக படுத்திருந்தது. மேலும் வாகனத்திலிருந்த சுற்றுலா பயணிகளுக்கு இந்த இரு சிங்கங்களும் எந்தவிதமான தீங்கையும் ஏற்படுத்தாத நிலையில் அமைதியான முறையில் இருந்தது அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தி உள்ள நிலையில் இந்த வீடியோவுக்கு லைக்குகள் குவிந்து வருவதோடு பலரும் தங்கள் கருத்துக்களை வியப்புடன் பதிவிட்டு வருகின்றனர்.