வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் அ.தி.மு.க. தலைமையிலான கூட்டணி 210 இடங்களில் வெற்றி பெற்று, தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கும் என்று அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
சென்னையில் தனியார் செய்தி நிறுவனம் நடத்திய கருத்தரங்கில் பங்கேற்று அவர் பேசியதாவது, தமிழகத்தில் திமுக ஆட்சியை அகற்ற மக்கள் தயாராகிவிட்டனர். தேசிய ஜனநாயகக் கூட்டணியில் (NDA) இணைந்து தேர்தலைச் சந்திக்கத் தயாராக உள்ளோம். அ.தி.மு.க. கூட்டணி அமைத்தால் அதனை ‘அடிமை’ என்று விமர்சிப்பவர்கள், உண்மையில் காங்கிரஸிடம் அடிமையாக இருக்கும் திமுக-வை கவனிக்க வேண்டும்.
தற்போது திமுக – காங்கிரஸ் இடையே ஒரு குழப்பமான சூழலே நிலவுகிறது. நிர்வாகத் திறமை குறித்து விவாதிக்க முதலமைச்சர் ஸ்டாலினுடன் நான் நேரடி விவாதத்திற்குத் தயார்.
தமிழக வெற்றி கழகம் (த.வெ.க) ஒரு தேர்தலைக் கூட இன்னும் சந்திக்கவில்லை. தேர்தலைச் சந்தித்தால்தான் அவர்களுக்கு இருக்கும் செல்வாக்கைக் கணிக்க முடியும். விஜய் திரையில் வேண்டுமானால் ‘சூப்பர் ஸ்டார்’-ஆக இருக்கலாம், ஆனால் அரசியலில் அப்படி இல்லை.
புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர் பெயரைச் சொன்னால்தான் இங்கு அரசியல் நடத்த முடியும். த.வெ.க மீது எங்களுக்கு மென்மையான போக்கு ஏதுமில்லை, அவர்களுக்குப் பிரச்சினை வந்தபோது மனிதாபிமான அடிப்படையில் மட்டுமே குரல் கொடுத்தோம்.
அதிமுக-விற்கும் டி.டி.வி. தினகரனுக்கும் இடையே கருத்து வேறுபாடுகள் ஏதுமில்லை. வாக்குகள் சிதறக் கூடாது என்பதற்காகவே கூட்டணி அமைத்துள்ளோம். அதேசமயம் ஓ.பி.எஸ் மற்றும் சசிகலா குறித்து எங்களது நிலைப்பாட்டை ஏற்கனவே தெளிவாக விளக்கிவிட்டோம். இவ்வாறு எடப்பாடி பழனிசாமி பேசினார்.
