தமிழகத்தில் கூட்டணி ஆட்சி அமையுமா அல்லது ஒரு கட்சி ஆட்சி நீடிக்குமா என்பதை மக்களே முடிவு செய்வார்கள் என்று காங்கிரஸ் எம்.பி. மாணிக்கம் தாகூர் தெரிவித்துள்ளார். இதன் மூலம் தி.மு.க. – காங்கிரஸ் கூட்டணியில் ‘அதிகாரப் பகிர்வு’ குறித்த விவாதம் மீண்டும் சூடுபிடித்துள்ளது.

சென்னையில் நடைபெற்ற தனியார் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய முதல்வர் மு.க. ஸ்டாலின், “தமிழகத்தில் கூட்டணி ஆட்சி என்பதற்கு இடமில்லை; அது மாநிலத்தின் சூழலுக்கு ஒத்து வராது. இருப்பினும் காங்கிரஸ் கட்சியுடனான எங்களது தேர்தல் கூட்டணி வலுவாகத் தொடரும்,” என்று கூறினார். கூட்டணி ஆட்சி கோரி வந்த காங்கிரஸ் தலைவர்களின் விருப்பத்திற்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக முதல்வரின் இந்த பேச்சு அமைந்தது.

முதல்வரின் கருத்து வெளியான சில நிமிடங்களிலேயே, விருதுநகர் தொகுதி காங்கிரஸ் எம்.பி. மாணிக்கம் தாகூர் தனது சமூக வலைதளப் பக்கத்தில் “தமிழகத்தில் கூட்டணி ஆட்சியா அல்லது ஒரு கட்சி ஆட்சியா என்பதை மக்கள் தான் முடிவு செய்வார்கள். கடந்த 2006-ஆம் ஆண்டு மக்கள் வழங்கிய தீர்ப்பை (கூட்டணி ஆட்சி) முறையாகச் செயல்படுத்தாதது தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி செய்த தவறு என்று பதிவிட்டுள்ளார்.

கடந்த 2006 சட்டப்பேரவைத் தேர்தலில் தி.மு.க. 96 இடங்களிலும், காங்கிரஸ் 34 இடங்களிலும் வெற்றி பெற்றன. அப்போது தி.மு.க.வுக்குத் தனிப் பெரும்பான்மை கிடைக்காத நிலையிலும், காங்கிரஸ் வெளியிலிருந்து ஆதரவு அளித்தது. அந்தச் சந்தர்ப்பத்திலேயே ஆட்சியில் பங்கு கேட்டிருக்க வேண்டும் என்பதையே மாணிக்கம் தாகூர் தனது பதிவில் சூசகமாகக் குறிப்பிட்டுள்ளார்.

தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை தொடர்ந்து ‘அதிகாரப் பகிர்வு’ மற்றும் ‘கூட்டணி ஆட்சி’ பற்றிப் பேசி வரும் நிலையில், மாணிக்கம் தாகூரின் இந்தப் பதிவு அரசியல் வட்டாரத்தில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. வரும் தேர்தலில் தொகுதிப் பங்கீட்டின் போது, காங்கிரஸ் கட்சி கூடுதல் இடங்களைக் கோரவும், தி.மு.க.வுக்கு அழுத்தம் கொடுக்கவும் இந்த விவகாரத்தை ஒரு கருவியாகப் பயன்படுத்தக்கூடும் என்று அரசியல் நோக்கர்கள் கருதுகின்றனர்.