அமெரிக்கா மற்றும் ஈரான் இடையே போர் பதற்றம் உச்சக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், உலகளவில் சுமார் 20 சதவீத கச்சா எண்ணெய் போக்குவரத்தைக் கட்டுப்படுத்தும் முக்கிய வழித்தடமான ஹார்முஸ் ஜலசந்தியில் (Strait of Hormuz), ஈரானின் கடல்வழி முற்றுகையையும் மீறி அமெரிக்கா ஒரு பிரம்மாண்ட ரகசிய ராணுவ ஆபரேஷனை நடத்தியுள்ளதாக அதிபர் டொனால்ட் டிரம்ப் அதிரடியாக உடைத்துள்ளார்.

தனது ‘ட்ரூத் சோஷியல்’ வலைதள பக்கத்திலும், வெள்ளை மாளிகை செய்தியாளர் சந்திப்பிலும் இதுகுறித்து விளக்கமளித்த டிரம்ப், அமெரிக்க ராணுவத்திற்குத் தான் பிறப்பித்த ரகசிய உத்தரவின்படி, இரவு நேரத்தில் கப்பல்களின் விளக்குகளை முழுமையாக அணைத்துவிட்டு, ஈரானின் ரேடார்களின் கண்ணில் மண்ணைத் தூவி 200-க்கும் மேற்பட்ட வணிகக் கப்பல்களைப் பாதுகாப்பாகக் கடத்தியதாகக் கூறியுள்ளார்.

இந்த ஆபரேஷன் மூலம் சுமார் 10 கோடி பேரல் கச்சா எண்ணெய் உலகச் சந்தைக்குக் கொண்டு செல்லப்பட்டதால், கச்சா எண்ணெய் விலை 200 டாலராக எகிறாமல் 90 டாலருக்கும் கீழ் கட்டுப்படுத்தப்பட்டதாகவும், இதன் மூலம் ஹார்முஸ் ஜலசந்தி தற்போது ஈரானின் கட்டுப்பாட்டில் இல்லை, அமெரிக்காவின் முழுக் கட்டுப்பாட்டில் தான் உள்ளது என்றும் அவர் மார்தட்டியுள்ளார்.

மேலும், ஈரான் தங்களுக்குத் தெரியாமல் அனுப்பிய 22 எண்ணெய் கப்பல்களை ஒரே இரவில் அமெரிக்கப் படைகள் அதிரடியாக இடைமறித்துப் பறிமுதல் செய்துள்ளதாகவும், அமெரிக்காவின் அப்பாச்சி ஹெலிகாப்டர் சுட்டு வீழ்த்தப்பட்டதற்குப் பழிவாங்க ஈரானின் தலைநகர் தஹ்ரான் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் அமெரிக்கா தொடர்ந்து 2 நாட்களாக குண்டுமழை பொழிந்து வருவதாகவும், அதற்குப் போட்டியாக ஈரானும் அமெரிக்க முகாம்களைத் தாக்கி வருவதால் சர்வதேச அளவில் போர் மேகங்கள் சூழ்ந்துள்ளன.