மேற்கு ஆசியாவில் அமெரிக்கா மற்றும் ஈரான் இடையே போர் பதற்றம் தொடர்ந்து இரண்டாவது நாளாக உச்சக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், இது ஒட்டுமொத்த உலகப் பொருளாதாரத்திலும் பெரும் குழப்பத்தையும் கவலையையும் ஏற்படுத்தியுள்ளது. இந்தத் தொடர் மோதல்களால் கச்சா எண்ணெய் மற்றும் எரிவாயு விநியோகம் கடுமையாகப் பாதிக்கப்பட்டு, சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை பேரலுக்கு 95 டாலர் வரை கிடுகிடுவென எகிறியுள்ளது.
இதன் நேரடிப் பாதிப்பாக, அமெரிக்க தொழிலாளர் புள்ளியியல் அமைச்சகம் வெளியிட்டுள்ள தரவுகளின்படி, மே மாதத்தில் அமெரிக்காவின் சில்லறை பணவீக்க விகிதம் (CPI) யாரும் எதிர்பாராத விதமாக 3 வருடங்களில் இல்லாத அளவிற்கு 4.2 சதவீதமாக உயர்ந்து டொனால்ட் டம்புக்கு பெரும் தலைவலியைத் தந்துள்ளது.
எரிபொருள் விலை உயர்வால் போக்குவரத்து மற்றும் அத்தியாவசியப் பொருட்களின் விலை விண்ணைத் தொட்டுள்ளதால், அமெரிக்க மக்களின் மாதச் சம்பளத்தை விட அன்றாடச் செலவுகள் இரண்டு மாதங்களாகத் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன; இதனால் மக்கள் தங்களது வாழ்வாதாரத்திற்காகச் சேமிப்புப் பணத்தைக் கரைக்க வேண்டிய நெருக்கடிக்குத் தள்ளப்பட்டுள்ளனர்.
இந்தத் திடீர் பொருளாதார வீழ்ச்சியால் அமெரிக்கப் பங்குச்சந்தையான ‘டவ் ஜோன்ஸ்’ (Dow Jones) ஒரே நாளில் 953 புள்ளிகள் சரிந்து முதலீட்டாளர்களைக் கலக்கமடையச் செய்துள்ளதோடு, பணவீக்கத்தைக் கட்டுப்படுத்துவதாகத் தேர்தல் பிரச்சாரத்தில் வாக்குறுதி அளித்த அதிபர் டிரம்ப் மற்றும் அவரது குடியரசுக் கட்சிக்கு, வரவிருக்கும் இடைத்தேர்தல் நேரத்தில் இந்த விவகாரம் ஒரு மிகப்பெரிய அரசியல் சவாலாக மாறியுள்ளது.
