உத்தரப் பிரதேச மாநிலம் சஹாரன்பூரில், ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் ரத்த வெள்ளத்தில் சடலங்களாக மீட்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. உயிரிழந்தவர்களின் உடல்களுக்கு அருகே மூன்று நாட்டுத் துப்பாக்கிகள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.
சஹாரன்பூர் மாவட்டம் கௌஷிக் விஹார் காலனியில் வசித்து வந்தவர் அசோக் ரதி. இவர் நகுர் வட்டாட்சியர் அலுவலகத்தில் பணியாற்றி வந்தார். நேற்று இவரது வீட்டில் இருந்து நீண்ட நேரமாக எந்தச் சத்தமும் வராததால் சந்தேகமடைந்த அக்கம் பக்கத்தினர் பார்த்தபோது, வீட்டின் உள்ளே அசோக் (45), அவரது மனைவி அஜிதா, தாய் வித்யாவதி மற்றும் மகன்கள் கார்த்திக், தேவ் ஆகிய 5 பேரும் துப்பாக்கிக் குண்டு காயங்களுடன் சடலமாகக் கிடப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்தனர்.
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு எஸ்.பி சாகர் ஜெயின் மற்றும் டி.ஐ.ஜி அபிஷேக் சிங் ஆகியோர் தலைமையிலான போலீஸ் படை விரைந்தது. தடய அறிவியல் நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு சோதனையிடப்பட்டது. உயிரிழந்தவர்களின் உடல்கள் உடற்கூறாய்வுக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.
முதற்கட்ட விசாரணையில், அசோக்கின் நெஞ்சிலும், அவரது குழந்தைகளின் நெற்றியிலும் துப்பாக்கிக் குண்டுகள் பாய்ந்திருப்பது தெரியவந்துள்ளது. மிக அருகாமையில் இருந்து இவர்கள் சுடப்பட்டுள்ளனர். சம்பவ இடத்திலிருந்து உரிமம் பெறாத 3 நாட்டுத் துப்பாக்கிகளை போலீஸார் பறிமுதல் செய்துள்ளனர். மேலும், அவர்களது மொபைல் போன்களையும் கைப்பற்றி ஆய்வு செய்து வருகின்றனர்.
இது குறித்து சஹாரன்பூர் டி.ஐ.ஜி ஆஷிஷ் திவாரி கூறுகையில்:”முதற்கட்ட ஆய்வில் இது தற்கொலை போலத் தெரிந்தாலும், மூன்று துப்பாக்கிகள் மீட்கப்பட்டுள்ளதால் பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகிறோம். அசோக் ரதி தனது குடும்பத்தினரைச் சுட்டுவிட்டு தானும் தற்கொலை செய்துகொண்டாரா அல்லது வேறு ஏதேனும் காரணமா என்பது குறித்து தடய அறிவியல் அறிக்கை வந்த பின்னரே முழுமையாகத் தெரியவரும்” என்றார்.
பலியான அசோக் ரதி மிகவும் அமைதியான குணம் கொண்டவர் என்றும், யாருடனும் அவருக்குப் பகை இருந்ததில்லை என்றும் அக்கம் பக்கத்தினர் தெரிவிக்கின்றனர். அவரது மகன்கள் ஒன்பதாம் மற்றும் பத்தாம் வகுப்பு படித்து வந்தனர். மேலும் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் உயிரிழந்த சம்பவம் அந்தப் பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
