மத்திய கிழக்கில் ஈரான் மற்றும் அமெரிக்கா இடையே போர் பதற்றம் உச்சகட்டத்தை எட்டியுள்ளது. ஈரானைத் தாக்க அமெரிக்கா திட்டமிட்டு வருவதாகவும், அதற்குப் பதிலடியாக மத்திய கிழக்கில் உள்ள அமெரிக்க ராணுவத் தளங்கள் மீது ஈரான் தாக்குதல் நடத்த வாய்ப்புள்ளதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன.
இதனால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, கத்தாரில் உள்ள ‘அல் உதைத்’ விமானப்படைத் தளம் மற்றும் பஹ்ரைனில் உள்ள கடற்படைத் தளத்திலிருந்து நூற்றுக்கணக்கான வீரர்களை அமெரிக்கா பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றியுள்ளது.
மற்ற நாடுகளில் உள்ள வீரர்கள் அங்கேயே நிலைநிறுத்தப்பட்டிருந்தாலும், வான்வழித் தாக்குதலைச் சமாளிக்க ஏவுகணை தடுப்பு அமைப்புகள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.
மத்திய கிழக்கு நாடுகள் தங்கள் வான்பரப்பை ஈரானுக்கு எதிரான தாக்குதலுக்குப் பயன்படுத்த அனுமதி மறுத்துவிட்டதால், அமெரிக்கா தனது சக்திவாய்ந்த போர்க்கப்பல்களை ஈரான் எல்லைக்கு அருகே நிலைநிறுத்தியுள்ளது.
யுஎஸ்எஸ் ஜெரால்டு போர்டு’ மற்றும் ‘யுஎஸ்எஸ் ஆபிரகாம் லிங்கன்’ போன்ற பிரம்மாண்டக் கப்பல்கள் மூலம் எந்த நேரத்திலும் ஈரான் மீது ஏவுகணைத் தாக்குதல் நடத்தப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
சர்வதேச எல்லையைப் பயன்படுத்தி இந்தத் தாக்குதல்கள் நடத்தப்பட வாய்ப்புள்ளதால், ஒட்டுமொத்த மத்திய கிழக்கு பகுதியிலும் பெரும் பதற்றம் நிலவி வருகிறது.
