ஐக்கிய அரபு அமீரகத்தில் நிகழ்ந்த ஒரு சோகமான விபத்தில், தங்கள் கண் முன்னே பிஞ்சு மகனைப் பறிகொடுத்த போதிலும், விபத்துக்குக் காரணமான ஓட்டுநரை மன்னித்து கேரளா தம்பதியினர் காட்டியுள்ள பெருந்தன்மை உலகெங்கிலும் உள்ள மக்களை நெகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
மேலும் ஷார்ஜாவில் வசித்து வரும் நிதின் மற்றும் வினுப்பிரியா தம்பதியினரின் 22 மாதக் குழந்தை, கார் நிறுத்தத்தில் எதிர்பாராத விதமாக நிகழ்ந்த விபத்தில் உயிரிழந்தது. தனது கவனக்குறைவால் ஒரு உயிர் பிரிந்துவிட்டதே என்று குற்ற உணர்ச்சியில் தவித்த அந்த ஓட்டுநரைச் சந்தித்த தம்பதியினர், நடந்த விபத்தை விதியாகக் கருதி அவரை முழுமனதாக மன்னிப்பதாகத் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில் நீதிமன்ற நடவடிக்கைகளின் போது அந்த ஓட்டுநருக்கு விதிக்கப்பட வேண்டிய தண்டனையோ அல்லது அபராதத் தொகையோ தங்களுக்குத் தேவையில்லை என்றும், அவர் மீது எந்தவித வன்மமும் இல்லை என்றும் அத்தம்பதியினர் உருக்கமாகத் தெரிவித்துள்ளனர்.
இதனால் “எங்கள் மகனை எங்களால் மீட்க முடியாது, ஆனால் ஒரு மனிதனின் வாழ்வை எங்களால் காப்பாற்ற முடியும்” என்ற அவர்களின் உயரிய சிந்தனை, துயரமான சூழலிலும் மனிதநேயம் இன்னும் உயிர்ப்புடன் இருப்பதை உணர்த்துகிறது. சட்டப் போராட்டங்களைக் கடந்து, மன்னிப்பதே ஆகச்சிறந்த தீர்வு என்பதை உலகுக்கு உணர்த்திய இந்தச் சம்பவம், அமீரக வாழ் மக்களிடையே பெரும் மரியாதையைப் பெற்றுள்ளது.
