உத்தரப்பிரதேச மாநிலம் கோரக்பூரில் காதலனே ஒரு இளம்பெண்ணை ஏமாற்றி கடத்தி, பல்வேறு நகரங்களில் உள்ள ஹோட்டல்கள் மற்றும் ஸ்பா மையங்களுக்கு விற்றுள்ள அதிர்ச்சி சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. அந்தப் பெண் தனது காதலனுடன் வீட்டை விட்டு வெளியேறிய நிலையில், அவர் திட்டமிட்டபடி பலரிடம் விற்கப்பட்டுள்ளார்.
மேலும் ஒரு இடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு மாற்றப்பட்டு, பல்வேறு நபர்களால் தொடர்ச்சியாக பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்ட அந்தப் பெண், ஒரு வழியாகக் குற்றவாளிகளின் பிடியிலிருந்து தப்பித்து காவல்துறைக்குத் தகவல் தெரிவித்துள்ளார்.
இந்த கொடூரச் சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து வழக்குப்பதிவு செய்துள்ள காவல்துறையினர், இளம்பெண்ணைக் கடத்தி விற்பனை செய்த அவரது காதலன் மற்றும் இந்த விபச்சார நெட்வொர்க்கில் தொடர்புடைய முக்கிய நபர்களைக் கைது செய்துள்ளனர். பாதிக்கப்பட்ட பெண்ணிற்குத் தற்போது மருத்துவச் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இந்த பெண்களின் பாதுகாப்பைக் கேள்விக்குறியாக்கும் வகையில் அமைந்துள்ள இந்தச் சம்பவத்தில் தொடர்புடைய மற்ற நபர்களையும், இந்த சட்டவிரோத ஸ்பா மற்றும் ஹோட்டல் நெட்வொர்க்குகளையும் கண்டறிய தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. சமூக வலைதளங்கள் மற்றும் காதல் என்ற பெயரில் நடக்கும் இது போன்ற வன்கொடுமைகள் குறித்துப் பொதுமக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் எனப் பலரும் வலியுறுத்தி வருகின்றனர்.
