தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள ஆற்றங்கரை கிராமத்தை சேர்ந்தவர் பரமசிவன்(28). இவர் கூலி தொழிலாளியாக வேலை பார்த்து வந்தார். நேற்று முன்தினம் பரமசிவன் அவரது நண்பர்களான முரளி(26), ஜெயராம்(25) ஆகிய இருவருடன் சேர்ந்து ஊரில் உள்ள வைப்பாற்றில் குளிக்க சென்றுள்ளார்.
அப்போது நண்பர்களுடன் குளித்துக் கொண்டிருந்த பரமசிவன் திடீரென்று ஆழமான பகுதிக்கு சென்றுள்ளார். இதனால் அவருக்கு மூச்சு திணறல் ஏற்பட்டு நீரில் மூழ்கியுள்ளார். இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த நண்பர்கள் நீந்தி சென்று உடனடியாக பரமசிவனை மீட்டு கரைக்கு கொண்டு சென்றனர். அப்போது பரமசிவன் மயக்க நிலையில் இருந்துள்ளார்.
எனவே அவரை இருசக்கர வாகனத்தில் வைத்து விளாத்திகுளம் அருகே உள்ள அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். அங்கு பரமசிவனை பரிசோதனை செய்த மருத்துவர் அவர் ஏற்கெனவே இறந்து விட்டதாக தெரிவித்தார். பின்பு இதுகுறித்து காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
அந்த தகவலின்படி சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் பரமசிவன் உடலை விட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இதுகுறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
