தூத்துக்குடி மாவட்டம் மடத்தூர் தேவர் தெருவை சேர்ந்தவர் முனியசாமி(58). இவர் தெரு தெருவாக சென்று சைக்கிளில் வைத்து டீ வியாபாரம் செய்து வந்தார். கடந்த 6 மாதங்களுக்கு முன்பு முனியசாமிக்கு ஏற்பட்ட ஒரு விபத்தில் அவரது வலது காலில் பலமான காயம் ஏற்பட்டது.
அதற்குப்பின் அவரால் சரியாக எழுந்து நடக்க முடியவில்லை. டீ வியாபாரம் செய்து தான் முனியசாமி தனது குடும்ப செலவினை பார்த்து வந்துள்ளார். ஆனால் அவருக்கு ஏற்பட்ட விபத்தினால் அவரது ஒட்டுமொத்த வாழ்வாதாரமும் பாதிக்கப்பட்டது.
எனவே தன்னால் எந்த ஒரு வேலைக்கும் செல்ல முடியவில்லை என நினைத்து முனியசாமி கடுமையான மன உளைச்சல் இருந்து வந்துள்ளார். இந்த நிலையில் வீட்டில் யாரும் இல்லாத நேரம் இன்று காலை முனியசாமி தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இதுகுறித்து தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று முனியசாமி உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் முனியசாமி தற்கொலைக்கான காரணம் குறித்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
