அமெரிக்காவின் ஒமாகா விமான நிலையத்தில் இருந்து டெட்ராயிட் நோக்கி புறப்பட்ட ஸ்கைவெஸ்ட் நிறுவனத்திற்குச் சொந்தமான பயணியர் விமானத்தில் பரபரப்பான சம்பவம் ஒன்று நிகழ்ந்தது. கடந்த ஜூலை 17-ஆம் தேதி நிகழ்ந்த இந்தச் சம்பவம், விமானத்தில் பயணித்த 67 பயணிகளும், 4 விமான ஊழியர்களும் அதிர்ச்சிக்குள்ளானதாக கூறப்படுகிறது.

23 வயதான மரியோ நிக்பிரேலாஜ் என்பவர், விமானம் புறப்பட்ட சில நிமிடங்களுக்குள் தனது சக பயணிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. இந்த நிலையில், அவரை கட்டுப்படுத்த முயன்ற விமான பணிப்பெண்ணை தள்ளி விட்டு, கொலை மிரட்டலும் விடுத்துள்ளார். மேலும் அதைவிட ஆபத்தான வகையில், விமானத்தின் அவசரக் கதவைத் திறக்க முயன்றதால், பயணிகள் மிகுந்த பீதியிலும் பதட்டத்திலும் சிக்கிக்கொண்டனர்.

“>

 

இந்த பரபரப்பான சூழலில், விமானத்தினர் உடனடியாக நடவடிக்கை எடுத்து, லோவா மாகாணத்தில் உள்ள செடார் ரேபிட்ஸ் விமான நிலையத்தில் அவசரமாக விமானத்தை தரையிறக்கினர். அங்கு முகாம் செய்திருந்த விமான நிலைய அதிகாரிகள், மரியோவை விமானத்திலிருந்து வெளியேற்றி, செடார் ரேபிட்ஸ் காவல்துறையிடம் ஒப்படைத்தனர்.

பின்னர், விமானம் மீண்டும் வழமைக்கு வந்து டெட்ராயிட் நோக்கி புறப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர். தற்போது கைது செய்யப்பட்ட மரியோவிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள். விமானப் பாதுகாப்புக்கு இடையூறாக செயல்பட்டதற்காக அவர் மீது கடுமையான குற்றச்சாட்டுகள் சுமத்தப்படும் வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.