கர்நாடகா மாநிலம் பெங்களூருவில், நாயுடன் நடைப்பயிற்சிக்குச் சென்ற 33 வயதுப் பெண் ஒருவருக்குப் பாலியல் அத்துமீறல் நடந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சனிக்கிழமை காலை 11.57 மணியளவில் இந்திராநகர் பகுதியில் இந்தப் பெண் தனது வழக்கமான நடைப்பயிற்சியில் ஈடுபட்டிருந்தபோது இந்தச் சம்பவம் நடந்துள்ளது. அப்போது, சுமார் 30 வயது மதிக்கத்தக்க அடையாளம் தெரியாத நபர், கருப்பு முடி, பழுப்பு நிற போலோ சட்டை மற்றும் சாம்பல் நிற ஜிப்-அப் ஷார்ட்ஸ் அணிந்து, அப்பெண்ணின் பின்னால் இருந்து வந்துள்ளார்.
அவர், “மேடம்” என்று அழைத்ததாகவும், அந்தப் பெண் திரும்பிப் பார்த்தபோது, அந்த நபர் ஆபாசமாக(சுயஇன்பம் ) நடந்துகொண்டதுடன், பாலியல் அத்துமீறலிலும் ஈடுபட்டதாகவும் அப்பெண் தனது புகாரில் குறிப்பிட்டுள்ளார்.
இந்தச் செயலால் அதிர்ச்சியடைந்த அந்தப் பெண், உடனடியாக அங்கிருந்து வீட்டிற்கு ஓடிச் சென்றுள்ளார். பின்னர் தனது சகோதரிக்குத் தகவல் தெரிவித்ததன் பேரில், இந்திராநகர் காவல் நிலையத்தில் அவர் புகார் அளித்தார். புகாரின் அடிப்படையில், போலீஸார் பொது இடத்தில் அநாகரிகமாக நடந்துகொண்டது மற்றும் பாலியல் துன்புறுத்தல் ஆகிய பிரிவுகளின் கீழ் முதல் தகவல் அறிக்கையைப் (FIR) பதிவு செய்துள்ளனர். தற்போது போலீஸார் இந்தச் சம்பவத்தில் ஈடுபட்ட குற்றவாளியை அடையாளம் கண்டு பிடிப்பதற்காகத் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
