மும்பையில், மாழ்தி பவார் (59) என்ற மூத்த பெண் வழக்கறிஞர், எஸ்பிளனேட் நீதிமன்ற வளாகத்தில் உள்ள வழக்கறிஞர்கள் அறையில் அமர்ந்திருந்தபோது திடீரென மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
குடும்ப நீதிமன்றம், மும்பை உயர் நீதிமன்றம் மற்றும் உள்ளூர் நீதிமன்றங்களில் பணியாற்றி வந்த மாழ்தி பவார், நெஞ்சு வலிப்பதாக உணர்ந்ததும் தனது கணவர் ரமேஷ் பவாருக்குத் தகவல் தெரிவித்துள்ளார். எனினும், சிறிது நேரத்திலேயே அவர் அங்கேயே மயங்கி விழுந்துள்ளார். உடனடியாக அவர் காமா மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில், மருத்துவர்கள் அவர் இறந்துவிட்டதாக அறிவித்தனர்.
இந்தத் துயரச் சம்பவத்தை விடவும், மாழ்தி பவாரின் மரணம் சரியான நேரத்தில் மருத்துவ உதவி கிடைக்காததால் நிகழ்ந்ததாக அவரது கணவர் ரமேஷ் பவார் குற்றம் சாட்டியுள்ளார். “யாரும் என் மனைவிக்கு சிபிஆர் (CPR) கூட கொடுக்கவில்லை. நீதிமன்றத்தில் இருந்து சில அடிகள் தூரத்தில் இருந்த ஜி.டி. மருத்துவமனைக்கு கூட யாரும் அழைத்துச் செல்ல முயற்சிக்கவில்லை.
மாறாக, அங்கிருந்த சிலர் தங்கள் மொபைல் ஃபோன்களை எடுத்து வீடியோ பதிவு செய்வதில் மும்முரமாக இருந்தனர். சரியான நேரத்தில் உதவி கிடைத்திருந்தால் என் மனைவி இன்று உயிருடன் இருந்திருக்கலாம்” என்று அவர் ஆழ்ந்த வேதனையுடன் தெரிவித்துள்ளார்.
இந்தச் சம்பவம், நீதிமன்ற வளாகங்களில் உள்ள மருத்துவ வசதிகள் குறித்துப் பெரிய கேள்விகளை எழுப்பியுள்ளது. இதனால், வழக்கறிஞர் சுனில் பாண்டே என்பவர், அவசர மருத்துவ வசதிகள், முதல் உதவி மற்றும் சிபிஆர் பயிற்சி ஆகியவற்றை அனைத்து நீதிமன்றங்களிலும் நிறுவக் கோரி தலைமை நீதித்துறை நடுவருக்குக் கடிதம் எழுதியுள்ளார்.
