அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே விசிகவினரின் வாகனத்தை மறித்து ரகளை செய்த பாமக இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மறைந்த முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் காடுவெட்டி குருவின் பிறந்தநாள் விழாவையொட்டி பாமகவினர் அந்தப் பகுதியில் திரண்டிருந்தனர்.
அப்போது, அவ்வழியாக வந்த விடுதலை சிறுத்தைகள் கட்சியினரின் வாகனத்தை வழிமறித்த சில பாமக இளைஞர்கள், திடீரென காரின் முன்பகுதியில் ஏறி நின்று கொண்டு தங்களது கட்சி கொடியை அசைத்து அடாவடியில் ஈடுபட்டனர். இந்த அநாகரீகமான செயல் தொடர்பான வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வெளியாகி கடும் கண்டனங்களைப் பெற்றன.
இந்தச் சம்பவம் குறித்துப் பெறப்பட்ட புகாரின் அடிப்படையில் விரைந்து நடவடிக்கை எடுத்த காவல்துறையினர், வீடியோ ஆதாரங்களைக் கொண்டு விசாரணையைத் தொடங்கினர். இதில் வாகனத்தின் மீது ஏறி ரகளை செய்த விக்னேஷ், பரத் மற்றும் கல்யாணக்குமார் ஆகிய மூவரைப் போலீசார் அதிரடியாகக் கைது செய்தனர்.
மேலும், இந்த மோதல் போக்கில் தொடர்புடைய தலைமறைவாக உள்ள மற்ற நபர்களைப் போலீசார் தீவிரமாகத் தேடி வருகின்றனர். அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக பொதுமக்களுக்கும் போக்குவரத்துக்கும் இடையூறு விளைவிக்கும் இத்தகைய செயல்களைத் தடுக்க அப்பகுதியில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
