வளைகுடா நாடுகளில் உள்ள அமெரிக்க ராணுவ தளங்கள் மற்றும் எண்ணெய் சுத்திகரிப்பு நிலையங்களைக் குறிவைத்து ஈரான் தொடர்ந்து தாக்குதல்களை நடத்தி வருகிறது. இதன் ஒரு பகுதியாக, துபாய் கடற்பரப்பில் கச்சா எண்ணெயுடன் நிறுத்தப்பட்டிருந்த குவைத்தின் ‘அல்-சல்மி’ என்ற கப்பல் மீது ஈரான் ட்ரோன் மூலம் தாக்குதல் நடத்தியது.
இந்தத் தாக்குதலால் கப்பலில் பயங்கரத் தீ விபத்து ஏற்பட்டு மேல்தளம் கடுமையாகச் சேதமடைந்தது. தீயணைப்பு வீரர்கள் நீண்ட நேரம் போராடித் தீயை அணைத்தனர். நல்வாய்ப்பாக, கப்பலில் இருந்த 24 பணியாளர்களும் காயமின்றித் தப்பினர். இருப்பினும், கப்பலில் இருந்து எண்ணெய் கசிவு ஏற்பட வாய்ப்புள்ளதாகத் தற்போதுஎச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையே, சவுதி அரேபியாவின் அல் கார்ஜ் மாகாணத்திற்குள் நுழைந்த ஈரானின் ட்ரோன்களை சவுதி ராணுவம் சுட்டு வீழ்த்தியது. அப்போது சிதறிய ட்ரோன் பாகங்கள் குடியிருப்பு பகுதிகளில் விழுந்ததில் சுமார் 6 வீடுகள் பலத்த சேதமடைந்தன.
வளைகுடா நாடுகளில் அடுத்தடுத்து நடக்கும் இந்தத் தாக்குதல்களால் கச்சா எண்ணெய் போக்குவரத்து பாதிக்கப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளதுடன், அப்பகுதியில் பெரும் பதற்றமும் நிலவி வருகிறது.
