தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனர்களில் ஒருவரான மாரி செல்வராஜ், நடிகர் விஜய் குறித்துத் தெரிவித்துள்ள கருத்துக்கள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன. நேற்று செய்தியாளர்களைச் சந்தித்த அவர், தனது திரைப்பயணம் மற்றும் நடிகர் விஜய்யின் அரசியல் வருகை குறித்துப் பல்வேறு தகவல்களைப் பகிர்ந்து கொண்டார்.
செய்தியாளர்களிடம் பேசிய மாரி செல்வராஜ், “விஜய் சார் சினிமா மீது எனக்குத் தனிப்பட்ட முறையில் பெரும் பிரியம் உண்டு. நான் சினிமாவை நோக்கி நகர அவரும் ஒரு முக்கியமான காரணம். ஒரு ரசிகனாக எனக்கு அவரை மிகவும் பிடிக்கும். நான் தியேட்டருக்குச் சென்று படம் பார்ப்பதற்குப் பிரதானக் காரணமாக விஜய் சார் இருந்தார். உண்மையைச் சொல்லப்போனால், நான் சினிமா துறைக்கு வந்ததற்கே அவர்தான் காரணம்” என்று நெகிழ்ச்சியுடன் தெரிவித்தார்.
தொடர்ந்து விஜய்யின் அரசியல் வருகை குறித்துக் கேட்கப்பட்ட கேள்விக்கு அவர் பதிலளிக்கையில்: “யார் வேண்டுமானாலும் அரசியலுக்கு வரலாம், மக்களுக்கு நல்லது செய்யலாம். அரசியலுக்கு வருபவர்களை நாம் வரவேற்க வேண்டும். அவருடைய அரசியல் நிலைப்பாடுகள் முழுமையாக வெளிப்படும் போதுதான் அதைப்பற்றிப் புரிந்து கொள்ள முடியும். அவரது புதிய பயணத்திற்கு எனது வாழ்த்துகள்,” என்றார்.
‘பரியேறும் பெருமாள்’, ‘கர்ணன்’, ‘மாமன்னன்’, ‘வாழை’ எனத் தொடர் வெற்றிப் படங்களைக் கொடுத்த மாரி செல்வராஜ் இயக்கத்தில் சமீபத்தில் ‘பைசன்’ படம் வெளியானது. மேலும் தற்போது நடிகர் தனுஷுடன் மீண்டும் இணைந்து புதிய படத்தை இயக்கம் பணிகளில் அவர் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார்.
